புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் புதிய அதிரடி ஆட்டக்காரராக உருவெடுத்துள்ளார் 26 வயதான ரிங்கு சிங்.
அனைத்துலக அளவில் இதுவரை 15 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 356 ஓட்டங்களைக் குவித்துள்ளார். அப்போட்டிகளில் 11 முறையே பந்தடிப்பாளராகக் களமிறங்க வாய்ப்பு கிடைத்தபோதும் எதிரணியினரின் பந்துகளை வெளுத்து வாங்கிய ரிங்கின் பந்தடிப்பு விகிதம் 176; சராசரி 89 ஓட்டங்கள். அவர் இருமுறை அரைசதம் விளாசியுள்ளார்.
அண்மையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் ரிங்கின் ஆட்டத்தைக் கண்டு மெய்சிலிர்த்துப்போன இந்திய வீரர் அஸ்வின், அவரை ‘இடக்கை டோனி’ என அழைக்கிறார்.
“ரிங்கு வேறுவகையான ஆட்டக்காரர். அவரை ‘இடக்கை டோனி’ என்று நான் அழைப்பேன். ஆனாலும், டோனியுடன் நான் அவரை ஒப்பிட மாட்டேன். ஏனெனில், டோனி மிகச் சிறந்த ஆட்டக்காரர்.
“இருப்பினும், ரிங்கின் கட்டுக்கோப்பான ஆட்டம் குறித்து நான் பேசுகிறேன். உத்தரப் பிரதேச மாநில அணிக்காக ஏராளமான ஓட்டங்களைக் குவித்து, இந்திய அணிக்குள் அவர் நுழைந்துள்ளார்,” என்று அஸ்வின் கூறியுள்ளார்.
“இந்திய அணி எத்தகைய சிக்கலில் இருந்தாலும் அல்லது ஆட்டத்தை முடித்து வைப்பதாக இருந்தாலும், ‘நான் தயாராக இருக்கிறேன்’ என்று ரிங்கு கூறுவதுபோலவே இதுவரையிலும் அவரது ஆட்டம் அமைந்துள்ளது. தமது அணி முதலில் பந்தடித்தாலும் சரி, அல்லது இலக்கை விரட்டினாலும் சரி, ரிங்கு தனது கட்டுக்கோப்பான அணுகுமுறையை மாற்றுவதே இல்லை. இன்னிங்சின் இறுதியில் அவர் களமிறங்கினால் அது அணிக்கு போனஸ்,” என்று அஸ்வின் புகழ்ந்தார்.
இதனிடையே, இந்தியா சென்றுள்ள இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக பிப்ரவரி 1ஆம் தேதி தொடங்கும் அதிகாரத்துவமற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய ‘ஏ’ அணியில் ரிங்கு சிங் சேர்க்கப்பட்டுள்ளார்.