பெங்களூரு: இந்தியாவில் நடந்துவரும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நியூசிலாந்து ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்திரா புதிய சாதனைகளுடன் அருமையாக விளையாடி வருகிறார்.
இதுவரை ஒன்பது போட்டிகளில் விளையாடி மூன்று சதம், இரண்டு அரைசதம் உட்பட 565 ஓட்டங்களை அவர் குவித்துள்ளார்; ஐந்து விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளார்.
ரச்சினின் பெற்றோர் கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்தவர்கள்.
இந்நிலையில், இம்மாதம் 9ஆம் தேதி வியாழக்கிழமை பெங்களூரு சின்னசாமி விளையாட்டரங்கில் நியூசிலாந்து - இலங்கை அணிகள் மோதின. அதில் வென்று, நியூசிலாந்து அணி அரையிறுதி வாய்ப்பை ஏறத்தாழ உறுதிப்படுத்திக்கொண்டது.
அப்போட்டிக்காக பெங்களூரு சென்றிருந்த ரச்சின், அப்படியே அங்குள்ள தன் தாத்தா பாட்டி வீட்டிற்கும் சென்றார்.
அங்கே, ரச்சினுக்குச் சுற்றிப் போட்டு, கண் திருஷ்டி கழித்தார் அவருடைய பாட்டி.
அக்காணொளியைத் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார் ரச்சின்.
“இப்படியோர் அற்புதமான குடும்பம் கிடைத்ததற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். தாத்தா பாட்டிமார் எல்லாரும் தேவதைகள். அவர்களது நினைவுகளும் ஆசிகளும் எப்போதும் நம்முடன் இருக்கும்,” என்று ரச்சின் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
“இந்திய ரசிகர்களின் ஆதரவு, குறிப்பாக பெங்களூரில் விளையாடியபோது நம்ப முடியாத வகையில் இருந்தது. பார்வையாளர்கள் என் பெயரை உச்சரித்தபடியே இருந்ததை நான் எளிதாக எடுத்துக்கொள்ள மாட்டேன். குழந்தையாக இருந்தபோது இப்படிக் கனவு கண்டுள்ளேன். ஆறு முதல் 12 மாதங்களுக்குமுன் நான் அணியிலேயே இல்லை. பதின்ம வயதில் குழு கிரிக்கெட் விளையாட இங்கு வந்துள்ளேன். அது எனக்குப் பேருதவியாக இருந்து வருகிறது,” என்று ரச்சின் சொன்னார்.