டி20 கிரிக்கெட்டில் 700 விக்கெட்; ரஷீத் கான் சாதனை

டி20 கிரிக்கெட்டில் 700 விக்கெட்; ரஷீத் கான் சாதனை

2 mins read
36f04e81-8a26-4b68-842e-100b4bc7c2a6
டி20 போட்டிகளில் 700 விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் எனும் சாதனைக்குச் சொந்தக்காரரான ஆப்கானிஸ்தான் அணித்தலைவர் ரஷீத் கான். - படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: டி20 கிரிக்கெட் போட்டிகளில் 700 விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் ஆப்கானிஸ்தான் அணித்தலைவர் ரஷீத் கான்.

டெல்லியில் திங்கட்கிழமை (பிப்ரவரி 16) ஐக்கிய அரபுச் சிற்றரசுகளுக்கு (யுஏஇ) எதிரான டி20 உலகக் கிண்ணப் போட்டியின்போது அவர் இந்தச் சாதனையைப் படைத்தார்.

யுஏஇ ஆட்டக்காரர் முகம்மது அர்ஃபானின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் சுழற்பந்து வீச்சாளரான ரஷீத் கான் இந்த மைல்கல்லை எட்டினார்.

வெஸ்ட் இண்டீசின் டுவைன் பிராவோ (631), சுனில் நரைன் (613) இருவரும் முறையே இரண்டாம், மூன்றாம் நிலைகளில் உள்ளனர். அவ்விருவரில் பிராவோ ஓய்வுபெற்றுவிட்டார்.

அனைத்துலக டி20 போட்டிகளிலும் அதிக விக்கெட் வீழ்த்தியோரில் 27 வயது ரஷீத் கானே முதலிடத்தில் இருக்கிறார். அவர் இதுவரை 191 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். நியூசிலாந்தின் முன்னாள் தலைவர் டிம் சௌத்தி (164), ஈஸ் சோதி (162) முறையே அடுத்த இரு இடங்களில் உள்ளனர்.

டி20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்குமுன் ரஷீத் கான் செய்தியாளர்களைச் சந்தித்தபோதெல்லாம் 700 விக்கெட் சாதனை குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.

அவ்வகையில், கடந்த செவ்வாய்க்கிழமை தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான உலகக் கிண்ணப் போட்டிக்கு முன்னரும் அவரிடம் அதுபற்றிக் கேட்கப்பட்டது.

அப்போது, “மனத்தளவில் நான் எந்த இலக்கையும் வகுக்கவில்லை. 700 விக்கெட்டுகளை வீழ்த்தியவுடன் நான் நின்றுவிட மாட்டேன். உலகக் கிண்ணப் போட்டிகளில் என் நாட்டு அணிக்காக விளையாடும்போது, என் முழுத் திறனையும் காட்ட முயல்வேன். அணிக்குத் தேவைப்படும்போது நான் விக்கெட் வீழ்த்த முயல்வேன்,” என்று ரஷீத் கான் கூறியிருந்தார்.

குறிப்புச் சொற்கள்