ஆப்கான் கிரிக்கெட் வீரருக்கு ரூ.10 கோடி பரிசா? ரத்தன் டாடா விளக்கம்

1 mins read
4e7afe72-1856-4341-8a86-44151d0e559a
ரத்தன் டாடா (இடது), ரஷீத் கான். - படங்கள்: ஊடகம்

மும்பை: இந்தியாவில் நடந்துவரும் உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடி வருகிறது.

இந்நிலையில், அவ்வணியின் நட்சத்திர வீரரான ரஷீத் கானுக்கு இந்தியாவின் ஆகப் பெரிய செல்வந்தர்களில் ஒருவரான ரத்தன் டாடா 10 கோடி ரூபாய் (S$1.64 மில்லியன்) பரிசுத்தொகை அறிவித்திருப்பதாகச் சமூக ஊடகங்கள் வழியாகத் தகவல் பரவியது.

கடந்த வாரம் சென்னையில் நடந்த போட்டியில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானைத் தோற்கடித்தது. போட்டி முடிந்தபின் ரஷீத் கான் இந்திய தேசியக் கொடியை உயர்த்திப் பிடித்ததாகவும் அதற்காக அனைத்துலக கிரிக்கெட் மன்றம் (ஐசிசி) அவருக்கு ரூ.55 லட்சம் அபராதம் விதித்ததாகவும் சமூக ஊடகப் பதிவுகள் கூறின.

அதனைத் தொடந்து, ரஷீத் கானுக்கு ரத்தன் டாடா பெரும்பரிசு அறிவித்துள்ளதாகவும் அப்பதிவுகள் குறிப்பிட்டன.

இந்நிலையில், அச்செய்தியில் துளியும் உண்மையில்லை என்று டுவிட்டர் வழியாக ரத்தன் டாடா தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும், “எப்படியிருப்பினும் கிரிக்கெட்டிற்கும் எனக்கும் தொடர்பே இல்லை. எனது அதிகாரபூர்வத் தளங்களிலிருந்து தகவல் வந்தால் ஒழிய, மற்ற வாட்ஸ்அப் செய்திகளையும் காணொளிகளையும் நம்ப வேண்டாம்,” என்றும் அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்