இங்கிலாந்து: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளர் பொறுப்புக்கு இந்தியாவைச் சேர்ந்த ரவி சாஸ்திரி சரியான தேர்வாக இருப்பார் என இங்கிலாந்து அணியின் முன்னாள் விளையாட்டாளர் மான்டி பனேசர் தெரிவித்துள்ளார்.
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட ‘ஆஷஸ்’ டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் முதல் மூன்று ஆட்டங்களில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தொடரின் நான்காவது போட்டி வெள்ளிக்கிழமை (டிசம்பர் 26) நடைபெறவிருக்கிறது.
இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக உள்ள பிரண்டன் மெக்கல்லமை நீக்க வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்படும் நிலையில், அந்த அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான மான்டி பனேசரின் கருத்து வெளிவந்துள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக மெக்கல்லம் பொறுப்பேற்றார். அதுமுதல் 44 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து அணி 25 முறை வெற்றிபெற்றது; 17 முறை தோல்வியைத் தழுவியது.
2023, 2025ஆம் ஆண்டு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு அந்த அணி தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகத்துக்கும் மெக்கல்லமுக்கும் இடையிலான ஒப்பந்தம் 2027ஆம் ஆண்டு வரை நடப்பில் இருக்கும்.
“ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது எப்படி என்பதை அறிந்த ஒருவர் குறித்து நாம் யோசிக்க வேண்டும். ஆஸ்திரேலியாவின் பலவீனம், அதன் உத்திகளை எப்படி நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது என்பதை நன்கு அறிந்த ஒருவர் வேண்டும். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளராக ரவி சாஸ்திரி செயல்படலாம் எனக் கருதுகிறேன்,” என்று பனேசர் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
இந்திய அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி செயல்பட்டபோது ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த போட்டிகளில் இந்திய அணி இருமுறை வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

