மட்ரிட்: பிரெஞ்சு காற்பந்து நட்சத்திரமான கிலியன் எம்பாப்பே, லா லீகா எனும் ஸ்பானிய லீக்கில் சேர்ந்த பிறகு முதன்முறையாக கோல் போட்டுள்ளார்.
தனது புதிய குழுவான ரியால் மட்ரிட்டுக்கு இரண்டு கோல்களைப் போட்டார் எம்பாப்பே. ரியால் பெட்டிசுக்கு எதிரான அந்த ஆட்டத்தில் ரியால் மட்ரிட் 2-0 எனும் கோல் கணக்கில் வென்றது.
ரியால் மட்ரிட்டில் சேர்ந்த பிறகு மூன்று ஆட்டங்களில் கோல் போடாதிருந்த எம்பாப்பே இந்த ஆட்டத்துக்குப் பிறகு பெருமூச்சு விட்டுக்கொண்டார்.
“நான் கோல் போடாமல் இருந்தபோதும் இங்கு மக்கள் என் மீது அன்பை வாரி வழங்கினர். மூன்று ஆட்டங்களில் நான் கோல் போடவில்லை. சிலர் அதை அதிகம் பொருட்படுத்தவில்லை. ஆனால் நான் அதைப் பெரிதாக நினைத்தேன்,” என்றார் எம்பாப்பே.
“எனினும், அந்தச் சூழலிலும் எனது குழுவினர், சக வீரர்கள், ரசிகர்கள் ஆகியோர் அனைவரும் எனக்கு ஆதரவாக இருந்தனர். இக்குழுவுக்கு கோல் போடுவதற்கான நம்பிக்கையை அவர்கள் எனக்கு அளித்தனர்,” என்றும் அவர் சொன்னார்.