லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியைப் பொறுத்தவரை இப்பருவம் மான்செஸ்டர் யுனைடெட் குழுவுக்குத் தொடர்ந்து சவால்மிக்கதாக இருக்கும் என்று அக்குழுவின் நிர்வாகியான ரூபன் அமோரிம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதற்காகத் தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தமது ஆட்டக்காரர்களிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தாம் கையாளும் அணுகுமுறையைக் கற்றுக்கொண்டு அதை ஆட்டத்தின்போது நடைமுறைப்படுத்த யுனைடெட்டின் ஆட்டக்காரர்கள் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக அவர் கூறினார்.
தமது உத்திகள் அவர்களுக்குப் புதிதாக இருப்பதாக அவர் கூறினார்.
இருப்பினும், ஜனவரி 16ஆம் தேதியன்று தனது ஓல்டு டிராஃபர்ட் விளையாட்டரங்கத்தில் சவுத்ஹேம்டன் குழுவை 3-1 எனும் கோல் கணக்கில் யுனைடெட் வீழ்த்தியது.
ஒரு கட்டத்தில் 1-0 எனும் கோல் கணக்கில் சவுத்ஹேம்டன் முன்னிலை வகித்தது.
இருப்பினும் மனந்தளராது போராடிய யுனைடெட் அடுத்தடுத்து கோல்களைப் போட்டு வாகை சூடியது.
யுனைடெட்டுக்காக அமாட் டியாலோ மூன்று கோல்களைப் போட்டு அசத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
லிவர்பூலுக்கு எதிராக ஆட்டம் 2-2 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.
எஃப்ஏ கிண்ணப் போட்டியில் ஆர்சனலை யுனைடெட் வீழ்த்தியது.
மீண்டும் வெற்றியின் பாதைக்குத் திரும்ப முடியும் என்ற நம்பிக்கையை அந்த வெற்றி யுனைடெட்டுக்குத் தந்தது.
இதற்கு முன்பு யுனைடெட்டின் நிர்வாகியாக எரிக் டென் ஹாக் பதவி வகித்தார்.
யுனைடெட் எதிர்பார்த்தபடி வெற்றிகளைக் குவிக்காமல் ஏமாற்றம் அளிக்கும் வகையில் செயல்பட்டதால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
அவருக்குப் பதிலாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம், யுனைடெட்டின் நிர்வாகியாக அமோரிம் நியமிக்கப்பட்டார்.
யுனைடெட்டுக்குப் பல சவால்கள் காத்திருப்பதாகவும் போட்டியின் கடைசி ஆட்டம் வரை போராட வேண்டி இருக்கும் என்றும் அமோரிம் தெரிவித்துள்ளார்.
தனது குழு சில சமயங்களில் நன்றாக விளையாடுவதாகவும் சில சமயங்களில் மோசமாகச் செயல்படுவதாகவும் அவர் கூறினார்.
சவுத்ஹேம்டனுக்கு எதிரான ஆட்டத்தைத் தமது குழு கைப்பற்றியபோதிலும் அந்த ஆட்டத்தில் தமது ஆட்டக்காரர்கள் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை என்றார் அவர்.
யுனைடெட்டின் ஆட்டக்காரர்கள் பலர் சோர்வுடன் இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
லீக் பட்டியலில் 26 புள்ளிகளுடன் யுனைடெட் 12வது இடத்தில் உள்ளது.
ஞாயிற்றுக்கிழமையன்று (ஜனவரி 19) பிரைட்டன் குழுவுடன் யுனைடெட் மோதுகிறது.
இந்த ஆட்டம் யுனைடெட்டின் ஓல்டு டிராஃபர்ட் விளையாட்டரங்கில் நடைபெறுகிறது.