புதுடெல்லி: இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் காப்பாளர் ரிஷப் பன்ட், 26, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியிலிருந்து விலகக்கூடும் என்று இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) டி20 கிரிக்கெட் போட்டிகளில் டெல்லி அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடியவர் பன்ட். அவரே அவ்வணி சார்பில் அதிக ஓட்டங்களை எடுத்தவரும்கூட.
இந்நிலையில், 2025 ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் டெல்லி அணி பன்டைத் தக்கவைக்காமல் போகலாம் என ‘தைனிக் ஜாக்ரன்’ இந்தி நாளிதழ் செய்தி தெரிவிக்கிறது.
டெல்லி அணி நிர்வாகம், பன்ட்மீது அதிருப்தியில் இருப்பதே அதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.
அதே நேரத்தில், டெல்லி அணியின் இயக்குநரும் இந்திய அணியின் முன்னாள் தலைவருமான சௌரவ் கங்குலி, அடுத்த பருவத்திலும் பன்டே டெல்லி அணியின் தலைவராகத் தொடர வேண்டும் என விரும்புவதாகச் சொல்லப்படுகிறது.
அப்படி ஒருவேளை டெல்லி அணியிலிருந்து பன்ட் வெளியேறும் பட்சத்தில், அவர் அடுத்து செல்லும் இடம் பெரும்பாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
ஐந்து முறை ஐபிஎல் பட்டம் வென்ற சென்னை அணியின் விக்கெட் காப்பாளர் மகேந்திர சிங் டோனி விரைவில் ஓய்வுபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி ஒருவேளை அவர் ஓய்வை அறிவித்தால், முன்னணி இந்திய விக்கெட் காப்பாளரை ஒப்பந்தம் செய்ய மிகுந்த ஆர்வமாக இருப்பதாக சென்னை அணி நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
ஐபிஎல் தொடரில் ஆக அதிக போட்டிகளில் விளையாடியவர் என்ற பெருமைக்குரியவர் 43 வயதான டோனி. இருப்பினும், அடுத்த பருவ ஐபிஎல் தொடரில் அவர் விளையாடுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, இந்திய அணி வீரர் கே.எல். ராகுல், லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணியுடனான தனது மூவாண்டு உறவை முறித்துக்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனான போட்டியின்போது, லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, ராகுலைக் கடிந்துகொண்டார். அது தொடர்பான காணொளி இணையத்தில் பரவலாக, பலரும் கோயங்காவின் செயலைக் கடுமையாக விமர்சித்திருந்தனர்.
இதனால் அதிருப்தியில் இருக்கும் 31 வயதான ராகுல், மீண்டும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்குத் திரும்பலாம் எனச் சொல்லப்படுகிறது.