பாரிஸ்: பிரெஞ்சு பொதுவிருதுப் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதியாட்டத்தில் யானிக் சின்னரும் கார்லோஸ் அல்கராசும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 8) மோதவிருக்கின்றனர்.
வாகை சூட இருவருக்கும் இடையிலான போட்டி, இந்தக் காலகட்டத்தின் அடையாளமாக விளங்கக்கூடிய இரு நட்சத்திரங்களுக்கு இடையிலான போட்டியாக மலரலாம் என்று சின்னர் கூறியுள்ளார். டென்னிஸ் நட்சத்திரங்கள் பலர் ஓய்வுபெற்றுவரும் வேளையில் இந்தச் சூழல் தலைதூக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இத்தாலியச் சேர்ந்த 23 வயது சின்னர், நான்காவது முறையாக கிராண்ட் சிலாம் விருதை வெல்லும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
அண்மைக் காலமாக ஆண்கள் டென்னிசின் ஆகக் பெரிய நான்கு நட்சத்திரங்களாக விளங்கி வந்தவர்கள் ரோஜர் ஃபெடரர், ரஃபாயெல் நடால், ஆண்டி மேரே, நோவோக் ஜோக்கோவிச். அவர்களில் ஜோக்கோவிச் மட்டும்தான் இன்னும் விளையாடிவரும் வேளையில் இனி அடுத்த தலைமுறை கொடிகட்டிப் பறக்க வாய்ப்பிருப்பதாக சின்னர் கூறினார்.
சின்னரும் ஸ்பெயினைச் சேர்ந்த 22 வயது வீரரான அல்கராசும் பிரெஞ்சுப் பொது விருதில் மோதவிருப்பது, அவ்விருவருக்கும் இடையே 12வது மோதலாகும்.
இதற்கிடையே, போட்டியின் அரையிறுதிச் சுற்றில் உலகத் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் சின்னரிடம் தோல்வியுற்ற ஜோக்கோவிச், இதுவே தான் போட்டியிடும் கடைசி பிரெஞ்சுப் பொது விருதுப் போட்டியாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
செர்பியாவைச் சேர்ந்த ஜோக்கோவிச், சென்ற மாதம் தனது 38வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

