கண்ணீர்விட்ட ரொனால்டாவிற்குப் போர்ச்சுகல் பயிற்றுநர் பாராட்டு

1 mins read
5080cbf9-98b7-45e2-8b85-fe3c9b3d7033
பெனால்டி வாய்ப்பைத் தவறவிட்ட கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு ஆறுதல் கூறும் சக போர்ச்சுகல் வீரர்கள். - படம்: இபிஏ

ஃபிராங்க்ஃபர்ட்: கூடுதல் நேரம்வரை சென்ற யூரோ 2024 காற்பந்துக் கிண்ண ஆட்டத்தில் பெனால்டி வாய்ப்பைக் கோட்டைவிட்டதால் கண்ணீர்விட்டார் போர்ச்சுகல் அணித்தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

ஆயினும், பெனால்டி வாய்ப்புகளில் அவரும் ஒரு கோலடிக்க, போர்ச்சுகல் 3-0 என்ற கணக்கில் சுலோவேனியாவை வீழ்த்தி, காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

ஆட்டம் முடிந்தபின் பேசிய போர்ச்சுகல் அணியின் பயிற்றுநர் ரொபர்ட்டோ மார்ட்டினஸ், “ரொனால்டோ அந்த அளவிற்குக் கவலைப்பட்டிருக்கத் தேவையில்லை. அவர் அந்த அளவிற்கு அக்கறையுடன் இருப்பதால்தான் அவருக்கு நான் நன்றிகூறிக்கொள்கிறேன். பெனால்டி வாய்ப்புகளின்போது முதல் பெனால்டியை அவர்தான் எடுப்பார் என நினைத்தேன். அவரும் அவ்வாறே செய்து, அணியின் வெற்றிக்கு வழியமைத்துக் கொடுத்தார்,” என்று சொன்னார்.

மேலும், “எங்கள் அணித்தலைவரை நினைத்து நாங்கள் அனைவரும் பெருமைப்படுகிறோம். அவரது செயல்பாடு ஒட்டுமொத்த குழுவிற்கு மகிழ்ச்சி தருகிறது. இன்றைய நாளே கடைசி நாள் என்பதுபோல் ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும். அந்த வகையில், ரொனால்டோ எங்களுக்குப் பாடம் கற்றுத் தருகிறார்,” என்றும் மார்ட்டினஸ் கூறினார்.

இன்னோர் ஆட்டத்தில். பிரான்ஸ் 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தியது. சொந்த கோலைப் போட்டு பிரான்சுக்கு வெற்றி தேடித் தந்தார் பெல்ஜியத்தின் ஜான் வெர்ட்ரோங்கன்.

அடுத்ததாக, சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு நடக்கவுள்ள காலிறுதி ஆட்டத்தில் போர்ச்சுகல், பிரான்சை எதிர்த்தாடவிருக்கிறது.

குறிப்புச் சொற்கள்