தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரோகித், கோஹ்லி விருப்பப்பட்டால் அவர்களுக்கு எதிர்காலம் உண்டு: காம்பீர்

1 mins read
af0e4e01-c384-404f-942d-80b528dd6cd1
ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் விராத் கோஹ்லி (இடது), ரோகித் சர்மா. - படம்: ஏஎஃப்பி

சிட்னி: மூத்த பந்தடிப்பாளர்கள் ரோகித் சர்மா, விராத் கோஹ்லி இருவரும் விருப்பப்பட்டால் இந்திய அணியில் அவர்களுக்கு எதிர்காலம் உள்ளது என்று அணியின் பயிற்றுவிப்பாளர் கெளதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடந்த அந்நாட்டு அணியுடனான டெஸ்ட் தொடரில் அவ்விருவரும் சோபிக்காதபோதும் காம்பீர் இவ்வாறு கூறியுள்ளார். அத்தொடரில் இந்தியா 3-1 எனும் ஆட்டக்கணக்கில் பின்னுக்குத் தள்ளப்பட்டது.

தொடரில் ஐந்தாவது போட்டியில் இந்தியா ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 10 ஆண்டுகளில் முதன்முறையாக இந்திய அணி, பார்டர்-கவாஸ்கர் கிண்ணத்தை (Border-Gavaskar Trophy) வெல்லத் தவறியது.

ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரின் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது போட்டிகளில் சரியாக விளையாடாததைத் தொடர்ந்து ரோகித்தின் விருப்பத்துக்கேற்ப ஐந்தாவது போட்டியில் களமிறக்கப்படாமல் அவருக்கு ஓய்வளிக்கப்பட்டது. அதேவேளை கோஹ்லி, முதல் இன்னிங்சில் 17 ஓட்டங்களையும் இரண்டாவது இன்னிங்சில் ஆறு ஓட்டங்களையும் மட்டுமே எடுத்தார்.

“(அணியில்) எந்த விளையாட்டாளரின் எதிர்காலத்தைப் பற்றியும் நான் பேசப்போவதில்லை. அது அவர்களையும் பொறுத்திருக்கிறது,” என்றார் காம்பீர்.

“அவர்களிடம் இன்னும் அந்தத் துடிப்பும் தீரா ஆர்வமும் உள்ளன என்பதை நான் குறிப்பிட்டுச் சொல்வேன். அவர்கள் (மனத்தளவில்) திடமானவர்கள். அவர்கள் இந்திய கிரிக்கெட்டை முன்னெடுத்துச் செல்வர் என்று நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்,” என்றும் காம்பீர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்