பொறுப்பற்ற நடத்தை: ரோகித் சர்மாவிற்கு அபராதம்

1 mins read
bb6002c8-3d3b-48d9-b817-e254fb1ed797
இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் ரோகித் சர்மா மணிக்கு 215 கிலோமீட்டர் வேகத்தில் காரோட்டி மாட்டிக்கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. - படம்: ஏஎஃப்பி

புனே: இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் ரோகித் சர்மாவிற்கு அதிவேகத்தில் கார் ஓட்டியதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா-பங்ளாதேஷ் அணிகள் மோதும் உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிங்கப்பூர் நேரப்படி வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்குத் தொடங்கவிருக்கிறது.

இதனையொட்டி, ரோகித் தலைமையிலான இந்திய அணி கடந்த ஞாயிற்றுக்கிழமையே புனே சென்றுவிட்டது.

இந்நிலையில், இந்திய அணி வீரர்கள் அனைவருக்கும் திங்கட்கிழமை ஒருநாள் ஓய்வளிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. மறுநாள் செவ்வாய்க்கிழமை மாலை மீண்டும் அவர்கள் புனேயிலுள்ள மகாராஷ்டிர கிரிக்கெட் சங்கத் திடலுக்குப் பயிற்சிக்குத் திரும்பினர்.

இதனிடையே, ரோகித் திங்கட்கிழமை ஒருநாளை மும்பையிலுள்ள தம் குடும்பத்தினருடன் செலவழிக்க விரும்பினார்.

அதன்படி, மும்பை-புனே விரைவுச்சாலையில் ரோகித் தனது லம்போர்கினி காரில் 215 கிலோமீட்டர் வேகத்தில் சென்றதாக ‘புனே மிரர்’ செய்தி தெரிவிக்கிறது.

இதனால் விழிப்படைந்த போக்குவரத்துக் காவலர்கள், அவருக்கு மூன்று அபராதச் செலுத்துச்சீட்டுகளை வழங்கியதாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் திங்கட்கிழமை நிகழ்ந்ததா அல்லது செவ்வாய்க்கிழமை நிகழ்ந்ததா என்பது அச்செய்தியில் குறிப்பிடப்படவில்லை.

நடப்பு உலகக் கிண்ணத் தொடரில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் போட்டியில் ஓட்டமேதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார் ரோகித். ஆயினும், அதன்பின் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 131 ஓட்டங்களையும் பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராக 86 ஓட்டங்களையும் அவர் விளாசினார்.

குறிப்புச் சொற்கள்