பேங்காக்: தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூர் ஆண்கள், பெண்கள் உருட்டுப்பந்து அணிக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது. அரையிறுதி ஆட்டத்தில் இரு அணிகளும் தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தன.
சிங்கப்பூர் ஆண்கள் அணி 878-876 என்ற புள்ளிக் கணக்கில் தாய்லாந்திடம் தோல்வியடைந்தது.
அதேபோல் சிங்கப்பூர் பெண்கள் அணி 835-809 என்ற புள்ளிக் கணக்கில் இந்தோனீசியாவிடம் வீழ்ந்தது.
ஆண்கள் போட்டியில் பிலிப்பீன்ஸ் தங்கம் வென்றது. தாய்லாந்துக்கு வெள்ளி கிடைத்தது.
பெண்கள் போட்டியில் மலேசியா தங்கம் வென்றது. இந்தோனீசியாவுக்கு வெள்ளி கிடைத்தது.
குழுப் போட்டியில் களமிறங்கிய அனைவரும் முதல்முறையாகத் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் விளையாடுகின்றனர்.
2025 தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூர் உருட்டுப்பந்து போட்டியாளர்கள் இரண்டு தங்கம், நான்கு வெண்கலம் என மொத்தம் ஆறு பதக்கங்கள் வென்றுள்ளனர்.
அரையிறுதியில் தோற்றது வருத்தம் தருகிறது, இருப்பினும் இளம் வீரர்கள் தங்களால் முடிந்த அளவு போராடினர் என்று சிங்கப்பூர் உருட்டுப்பந்துச் சங்கம் தெரிவித்துள்ளது.

