போர்ச்சுகல் காற்பந்து நட்சத்திரமான கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது நெடுநாள் காதலியும் மாடல் அழகியுமான ஜார்ஜினா ரோட்ரிகசைத் திருமணம் செய்துகொண்டுள்ளார்.
இவர்களது திருமணம் போர்ச்சுகலின் காஸ்கைஸ் நகரில் ஒரு பதிவுத் திருமணமாக செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 11) நடைபெற்றது.
திருமண நிகழ்ச்சியில் ரொனால்டோவின் ஐந்து குழந்தைகளும் கலந்துகொண்டதாகப் போர்ச்சுகீசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
திருமணத்தை உறுதிப்படுத்தும் வகையில், இருவரும் திருமண மோதிரங்களுடன் கைகளைக் கோத்திருக்கும் புகைப்படத்தை ரொனால்டோ தமது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
புகைப்படம் பதிவேற்றப்பட்ட அரை மணி நேரத்திற்குள் மூன்று மில்லியனுக்கும் அதிகமான விருப்பக் குறிகளைப் பெற்றது.
ரொனால்டோ ஸ்பெயினின் ரியால் மட்ரிட் காற்பந்து அணியில் விளையாடியபோது, மட்ரிட்டில் உள்ள உலகப் புகழ்பெற்ற ‘கூச்சி’ (Gucci) கடையில் ஜார்ஜினா பணியாற்றி வந்தார்.
அப்போது தொடங்கிய இவர்களது 10 ஆண்டுகாலக் காதல் வாழ்க்கை தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி வைர மோதிரப் படத்தைப் பகிர்ந்து இவர்கள் நிச்சயதார்த்தத்தை அறிவித்திருந்தனர்.
ரொனால்டோ-ஜார்ஜினா தம்பதிக்கு அலானா மார்டினா, பெல்லா எனும் பெண் குழந்தைகள் இருவர் உள்ளனர். பெல்லா பிறந்தபோது அவருடன் பிறந்த இரட்டை ஆண் குழந்தை உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. தம் குழந்தைகள் இருவருடன் ரொனால்டோவின் மற்ற மூன்று குழந்தைகளையும் ஜார்ஜினா பராமரித்து வருகிறார். தற்போது இவர்களது குடும்பம் சவூதி அரேபியத் தலைநகர் ரியாத்தில் வசித்து வருகிறது.


