மான்செஸ்டர்: தான் முன்னர் விளையாடிய மான்செஸ்டர் யுனைடெட் காற்பந்துக் குழு மீண்டும் பட்டம் வெல்லப் போட்டியிட வேண்டுமெனில், அடித்தளத்திலிருந்து அனைத்தையும் மறுகட்டமைக்க வேண்டியது அவசியம் என்று நட்சத்திரக் காற்பந்து ஆட்டக்காரரான 39 வயது கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார்.
கடந்த பருவ இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் யுனைடெட் குழு எட்டாமிடத்தைப் பிடித்தபோதும், அக்குழுவைத் தான் இன்னும் நேசிப்பதாகக் கூறினார் போர்ச்சுகலைச் சேர்ந்த 39 வயது ரொனால்டோ.
யுனைடெட் முன்னாள் ஆட்டக்காரர் ரியோ ஃபெர்டினாண்ட் வலையொலியில் பேசிய ரொனால்டோ, உட்கட்டமைப்பில் யுனைடெட் குழு முதலீடு செய்துவருவது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார். “எனது பார்வையில், அக்குழு எல்லாவற்றையும் மீண்டும் கட்டமைக்க வேண்டும். அதற்குக் கூடுதல் காலம் தேவைப்படும். ஏனெனில், யுனைடெட் இன்னும் உலகின் சிறந்த குழுக்களில் ஒன்றுதான். அதேநேரத்தில், அவர்கள் மாறவேண்டியதும் அவசியம். அது ஒன்றே வழி என்பதனை அவர்களும் புரிந்து வைத்துள்ளனர்,” என்றார் ரொனால்டோ.
யுனைடெட் குழுவிற்கு ஒளிமயமான எதிர்காலம் இருப்பதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
“ஆயினும், திறமையான ஆட்டக்காரர்களை மட்டும் அக்குழு நம்பியிருக்கக்கூடாது. அடித்தளத்திலிருந்து மாற்றம் தேவை. அது முடியாமல் போனால், அவர்களால் கிண்ணங்களுக்குப் போட்டியிட முடியாது,” என்றார் அவர்.
கடந்த 2003 - 2009 காலகட்டத்தில் யுனைடெட்டிற்காக ரொனால்டோ விளையாடியபோது, அக்குழு மும்முறை பிரிமியர் லீக் பட்டத்தையும், தலா ஒருமுறை சாம்பியன்ஸ் லீக் பட்டத்தையும் குழு உலகக் கிண்ணத்தையும் வென்றது குறிப்பிடத்தக்கது.