குழு அளவில் 500 கோல்கள் அடித்து ரொனால்டோ சாதனை

குழு அளவில் 500 கோல்கள் அடித்து ரொனால்டோ சாதனை

1 mins read
1b08c693-b5ad-4f63-a746-d0bd01147283
அல் வெஹ்தா குழுவிற்கு எதிரான ஆட்டத்தில் நான்கு கோல்களை அடித்தார் ரொனால்டோ. படம்: ஏஎஃப்பி -

ரியாத்: நட்சத்திர வீரரும் போர்ச்சுகல் அணித்தலைவருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ தமது காற்பந்து வாழ்க்கையில் மீண்டும் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளார்.

குழு அளவிலான போட்டிகளில் 500 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார் 38 வயதான ரொனால்டோ.

இப்போது சவூதி அரேபியாவின் அல் நசர் அணிக்காக விளையாடிவரும் இவர், நேற்று (பிப்ரவரி 9) அல் வெஹ்தா அணிக்கெதிரான சவூதி புரோ லீக் ஆட்டத்தில் நான்கு கோல்கள் அடித்து அணியை 4-0 என்ற கணக்கில் வெற்றிபெறச் செய்தார்.

இதுவரை ஐந்து வெவ்வேறு காற்பந்துக் குழுக்களுக்காக ரொனால்டோ விளையாடி இருக்கிறார்.

இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைடெட் (103 கோல்கள்), ஸ்பெயினின் ரியால் மட்ரிட் (311 கோல்கள்), இத்தாலியின் யுவென்டஸ் (81 கோல்கள்), போர்ச்சுகலின் ஸ்போர்ட்டிங் லிஸ்பன் (3 கோல்கள்), தற்போது அல் நசர் (5 கோல்கள்) என ஐந்து குழுக்களை இவர் பிரதிநிதித்துள்ளார்.

அனைத்துலகப் போட்டிகளிலும் ஆக அதிக கோல்களை (118) அடித்தவர் என்ற பெருமைக்கும் இவர்தான் சொந்தக்காரர்.