ரொனால்டோ சாதனை; விளையாடிய 6 உலக கிண்ணப் போட்டிகளிலும் கோல்

ரொனால்டோ சாதனை; விளையாடிய 6 உலக கிண்ணப் போட்டிகளிலும் கோல்

1 mins read
8b9794e9-ff9b-4234-ad3d-48c80a4c73ba
 வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய போர்ச்சுகல் அணிக்கு ரொனால்டோ அசத்தலான தொடக்கம் கொடுத்தார். - படம்: ராய்ட்டர்ஸ்

நியூயார்க்: காற்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ, புதன்கிழமை (ஜூன் 24) பின்னிரவு உஸ்பெக்கிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இரண்டு கோல்கள் அடித்து அசத்தினார்.

இதன்மூலம் ஆறு உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ரொனால்டோ படைத்தார். உலகக் கிண்ணப் போட்டிகளில் இதுவரை அவர் 10 கோல்கள் அடித்துள்ளார்.

கடந்த வாரம் காங்கோவுக்கு எதிரான ஆட்டத்தில் போர்ச்சுகல் அணி மோசமாக விளையாடியது. இதனால் அந்த ஆட்டம் சமநிலையில் முடிந்தது.

இந்நிலையில், வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய போர்ச்சுகல் அணிக்கு ரொனால்டோ அசத்தலான தொடக்கம் கொடுத்தார். 6வது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பை அவர் கோலாக மாற்றினார்.

அதேபோல் 17வது நிமிடத்தில் கிடைத்த ‘ஃபிரீகிக்’ வாய்ப்பைத் தந்திரமாகப் பயன்படுத்தி நூனோ மென்டீசை கோல் அடிக்க வைத்தார் ரொனால்டோ.

பின்னர் மீண்டும் 39வது நிமிடத்தில் ரொனால்டோ கோல் அடித்து அரங்கத்தை அதிரவைத்தார்.

ஆட்டத்தின் 60, 87வது நிமிடங்களிலும் போர்ச்சுகலுக்கு கோல்கள் கிடைத்தன. இறுதியில் அந்த அணி 5-0 என்ற கோல் கணக்கில் உஸ்பெக்கிஸ்தானை வீழ்த்தியது.

வேகமாக விளையாடுவதில்லை, கோல் அடிப்பதில்லை போன்ற விமர்சனங்கள் 41 வயது ரொனால்டோமீது முன்வைக்கப்பட்டன. அவற்றுக்குப் பதிலடிகொடுக்கும் விதமாகத் தற்போது ரொனால்டோ விளையாடியுள்ளது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

போர்ச்சுகல் வரும் 28ஆம் தேதி அதிகாலை பலம்வாய்ந்த கொலம்பியாவுடன் மோதுகிறது. அந்த ஆட்டத்தில் வெற்றிபெறும் அணி ‘கே’ பிரிவில் முதலிடத்தைப் பிடிக்கும்.

குறிப்புச் சொற்கள்