தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ.58 கோடி பரிசு

1 mins read
46968ba0-69c9-4d55-bbd7-1008e6c2e6bc
மார்ச் 9ஆம் தேதி நடந்த இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி, வாகையர் கிண்ணத்தைக் கைப்பற்றிய இந்திய அணியினர். - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: வாகையர் கிண்ணம் (சாம்பியன்ஸ் டிராபி) வென்ற இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு ரூ.58 கோடி (S$8.95 மில்லியன்) பரிசுத்தொகை வழங்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

பாகிஸ்தானிலும் துபாயிலும் நடந்த அந்த ஒருநாள் போட்டித் தொடரின் இறுதிப் போட்டி மார்ச் 9ஆம் தேதி நடைபெற்றது. அதில், ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியைத் தோற்கடித்தது.

இதனையடுத்து, இந்திய அணிக்குப் பெரும்பணத்தைப் பரிசாக அறிவித்துள்ள பிசிசிஐ, அது வீரர்கள், பயிற்றுநர்கள், மற்ற ஊழியர்கள், தேர்வுக்குழு உறுப்பினர்கள் ஆகியோருக்குப் பகிர்ந்தளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

முன்னதாக, 2024ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக் கிண்ணப் போட்டிகளிலும் இந்திய அணியே கிண்ணத்தைக் கைப்பற்றியிருந்தது.

“அனைத்துலக கிரிக்கெட் மன்றம் (ஐசிசி) அடுத்தடுத்து நடத்திய இரு தொடர்களிலும் இந்திய அணி மகுடம் சூடியது சிறப்புக்குரியது. உலக அரங்கில் இந்திய அணியின் சிறந்த செயல்பாட்டையும் அதன் அர்ப்பணிப்பையும் அங்கீகரிக்கும் வகையில் இந்தப் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது,” என்று பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி தெரிவித்துள்ளார்.

மொத்தம் எட்டு அணிகள் இரு பிரிவுகளாக மோதிய வாகையர் கிண்ணப் போட்டிகளில் இந்திய அணி தோல்வியே காணாமல் இறுதிவரை ஆதிக்கம் செலுத்தியது. அதுபோல், கடந்த ஆண்டு நடந்த டி20 உலகக் கிண்ணப் போட்டிகளிலும் இந்திய அணி ஒரு போட்டியிலும் தோற்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்