தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விட்டதைப் பிடித்த ரசல்; வெற்றிகரமாகப் பந்தயத்தை நடத்திய சிங்கப்பூர்

3 mins read
e7cbbd4b-be55-429f-aee2-3a6d38a79f07
முதல்முறையாகச் சிங்கப்பூரில் வெற்றிபெற்ற மெர்சிடிஸ் அணியின் ஜார்ஜ் ரசல். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 4

இரவுநேரக் கார்ப் பந்தயமான சிங்கப்பூர் ஏர்லைன்சின் சிங்கப்பூர் கிராண்ட் பிரீ 2025 வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

விறுவிறுப்பான பந்தயத்துடன் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என மூன்று நாள்களுக்கும் (அக்டோபர் 3, 4, 5) மரீனா பே வட்டாரம் கோலாகலமாக இருந்தது.

2023ஆம் ஆண்டு நடந்த சிங்கப்பூர் பந்தயத்தில் வெற்றிக்கு மிக அருகில் வந்து தோல்வியைத் தழுவினார் மெர்சிடிஸ் அணியின் ஜார்ஜ் ரசல்.

இம்முறை வெற்றிபெற வேண்டும் என்று முழு வேகத்துடன் களமிறங்கிய அவர் சிறப்பாகச் செயல்பட்டு கிண்ணத்தைத் தட்டிச் சென்றார்.

தகுதிச் சுற்றில் முதலிடம் பிடித்த ரசல், பந்தயத்தை முதலிடத்தில் தொடங்கி பந்தயம் முழுக்க ஆதிக்கம் செலுத்தினார். மற்ற கார்களுக்கும் ரசலுக்கும் இடையே பல மீட்டர் தூரம் இடைவெளி இருந்தது ரசிகர்களை வியப்பில் தள்ளியது.

“2023ஆம் ஆண்டு பந்தயத்தின் கடைசிச் சுற்றில் சிறிய தவறு செய்தேன், அதனால் விபத்து நேர்ந்தது, வெற்றியும் பறிபோனது. இம்முறை சிங்கப்பூரில் எந்தத் தவறும் செய்யவில்லை, அனுபவத்துடன் நம்பிக்கையுடன் செயல்பட்டேன்,” என்று ரசல் தெரிவித்தார்.

“பந்தயத்தைத் தொடங்குவதற்கு முன்னர் பதற்றமாக இருந்தது. எப்போது என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெளிவாகத் திட்டமிட்டேன், அது வெற்றிக்கு உதவியது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது சிங்கப்பூரில் நடந்த கடைசி ஐந்து பந்தயங்களிலும் வெவ்வேறு ஓட்டுநர்கள் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

வெர்ஸ்டாப்பன் அசத்தல்

பந்தயத் திடலில் இரண்டாம் இடத்தில் இருந்த ரெட் புல் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டாப்பனுக்கும் மூன்றாவது இடத்தில் இருந்த மெக்லேரன் குழுவின் லேண்டோ நாரிசுக்கும் இடையே கடுமையான போட்டி இருந்தது.

வெர்ஸ்டாப்பன் காரில் சில பிரச்சினைகள் இருந்தன. அதனால் அவர் சற்று தடுமாறினார். இருப்பினும் நாரிசை முந்தவிடாமல் தற்காத்து காரை ஓட்டினார்.

36வது சுற்றிலிருந்து கடைசிச் சுற்றான 62வது சுற்றுவரை நாரிஸ் கொடுத்த அழுத்தத்தை அருமையாகக் கையாண்டார் வெர்ஸ்டாப்பன்.

உறவில் விரிசல்

பந்தயம் தொடங்குவதற்கு முன்னர் மூன்றாம் மற்றும் ஐந்தாம் இடத்தில் மெக்லேரன் குழுவின் ஆஸ்கர் பியாஸ்ட்ரி மற்றும் லேண்டோ நாரிஸ் இருந்தனர்.

ஆனால், பந்தயம் தொடங்கிய 20 நொடிகளில் நாரிஸ் மூன்றாவது இடத்துக்கு முன்னேறினார். ஆஸ்கர் நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.

நாரிஸ் வேகமாக முன்னேறி ஆஸ்கரின் காரில் உரசினார். இது ஆஸ்கரைக் கோபப்படுத்தியது.

“இருவரும் ஓர் அணிதானே, இது சரியில்லை,” என்று பந்தயத்தின்போது நாரிசைக் கண்டித்தார் ஆஸ்கர்.

இந்தச் சம்பவத்தைப் பந்தய ஓட்டுநர்கள் விசாரித்தனர். அதில் நாரிஸ் எந்தத் தவறும் செய்யவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இது ஆஸ்கரை மேலும் ஏமாற்றமடைய வைத்தது.

இவ்வாண்டுக்கான வெற்றியாளர் கிண்ணத்தை வெல்ல ஆஸ்கருக்கும் நாரிசுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

தற்போது புள்ளிப் பட்டியலில் 336 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார் ஆஸ்கர். இரண்டாவது இடத்தில் 314 புள்ளிகளுடன் நாரிஸ் உள்ளார்.

கிண்ணத்தைத் தக்க வைத்த மெக்லேரன்

சிங்கப்பூர் பந்தயத்தில் 27 புள்ளிகள் எடுத்தது மெக்லேரன் அணி.

நாரிஸ் 15 புள்ளிகளும் ஆஸ்கர் 12 புள்ளிகளும் எடுத்தனர். இதன்மூலம் இப்பருவத்தில் 650 புள்ளிகளை எட்டியது அந்த அணி. மற்ற ஒன்பது அணிகளாலும் 650 புள்ளிகளை இப்பருவத்தில் எட்டமுடியாது.

கடந்த ஆண்டும் அணிகளுக்கான கிண்ணத்தை மெக்லேரன் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

கடுமையான வெப்பம்

இந்தமுறை சிங்கப்பூர் இரவுநேரக் கார்ப் பந்தயத்தில் வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதனால் ஓட்டுநர்கள் குளிர்ந்த ஆடையை அணிந்திருந்தனர். மேலும் பந்தயத்தின்போது ஓட்டுநர்களைத் தண்ணீர் குடிக்க அணி நிர்வாகிகள் ஊக்குவித்ததையும் பார்க்க முடிந்தது.

தலைவர்கள் வாழ்த்து

சிங்கப்பூர் கிராண்ட் பிரீயை வெற்றிகரமாக நடத்திய ஏற்பாட்டாளர்கள், தொண்டூழியர்கள் மற்றும் அமைப்புகளுக்குப் பிரதமர் லாரன்ஸ் வோங் தமது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.

மூத்த அமைச்சர் லீ சியன் லூங்கும் தனது வாழ்த்துகளைச் சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.

சிங்கப்பூர் கிராண்ட் பிரீயை மூன்று நாள்களில் 300,641 பேர் நேரில் கண்டு ரசித்தனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இம்முறை ரசிகர்கள் எண்ணிக்கை 11.7 விழுக்காடு அதிகரித்துள்ளது.

திரைப்பட நடிகர்கள், அரசியல் தலைவர்கள், பாடகர்கள் எனப் பல பிரபலங்களும் கண்டுகளித்தனர்.

குறிப்புச் சொற்கள்