லண்டன்: மான்செஸ்டர் யுனைடெட்டின் புதிய நிர்வாகி என்ற முறையில் ரூபன் அமோரிம் அந்தக் குழுவின் பயிற்சி வளாகத்தை திங்கட்கிழமை (நவம்பர் 11) அடைந்தார்.
அதுவரை யுனைடெட்டின் தற்காலிக நிர்வாகியாகச் செயல்பட்டு வந்த ரூட் வேன் நிஸ்டல்ரோய், அதே நாளன்று பயிற்றுவிப்பாளர் குழுவிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
யுனைடெட்டின் நிர்வாகியாக இருந்த எரிக் டென் ஹாக், கடந்த அக்டோபர் மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, தற்காலிக நிர்வாகியாக முன்னாள் நெதர்லாந்து மற்றும் யுனைடெட்டின் நட்சத்திர ஆட்டக்காரரான வேன் நிஸ்டல்ரோய் நியமிக்கப்பட்டிருந்தார்.
வேன் நிஸ்டல்ரோயின் தலைமையின்கீழ் யுனைடெட் நான்கு ஆட்டங்களில் களமிறங்கியது.
அதில் மூன்று ஆட்டங்களில் அது வெற்றி பெற்று ஓர் ஆட்டத்தில் சமநிலை கண்டது.
கடந்த வாரயிறுதியில் லெஸ்டர் சிட்டியை 3-0 எனும் கோல் கணக்கில் யுனைடெட் வீழ்த்தியது.

