மும்பை: ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்கள் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டனர்.
பந்தடிப்பு, பந்துவீச்சு, களக்காப்பு எனப் பல்வேறு பிரிவுகளில் அவ்விருதுகள் அடங்கும்.
இந்தப் பருவத்தில் வளர்ந்து வரும் வீரருக்கான விருதை 23 வயதான சாய் சுதர்ஷன் வென்றார். அவர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடினார்.
மேலும் அவர் அதிக ஓட்டங்கள் எடுத்த பந்தடிப்பாளருக்கான ‘ஆரஞ்சுத் தொப்பி’ விருதை வென்றார். இந்தப் பருவத்தில் சுதர்ஷன் 759 ஓட்டங்கள் குவித்தார். 88 பவுண்டரிகள் விளாசியதற்காகவும் அவருக்கு விருது வழங்கப்பட்டது.
இந்தப் பருவத்தில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பிரசித் கிருஷ்ணா ‘ஊதாத் தொப்பி’ விருதை வென்றார். குஜராத் அணிக்காக விளையாடிய அவர் 25 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய 14 வயது வைபவ் சூர்யவன்ஷி இந்தப் பருவத்தின் ‘சூப்பர் ஸ்ட்ரைக்கர்’ விருதை வென்றார். 7 ஆட்டங்களில் 252 ரன்களை அவர் குவித்தார். அவரதுபந்தடிப்பு விகிதம் 206.66 ஆகும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்தப் பருவத்திற்கான ‘ஃபேர்பிளே’ விருதை வென்றது.
இந்த விருதுகளுடன் பரிசுத் தொகையும் வெற்றியாளர்களுக்கு வழங்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இந்தப் பருவத்தில் சிறப்பாக விளையாடியதால் சுதர்ஷனுக்கு இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம் கிடைத்துள்ளது. அவர் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் களமிறங்கவுள்ளார்.