தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சத வாய்ப்பு நழுவியது குறித்து வருந்தாத சாய் சுதர்சன்

2 mins read
b0ce2db8-2185-4645-bee9-4ed302e38a76
87 ஓட்டங்களை எடுத்த இந்திய வீரர் சாய் சுதர்சன். - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

புதுடெல்லி: வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 318 ஓட்டங்களைக் குவித்தது.

அவ்வணியின் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 173 ஓட்டங்களுடன் களத்தில் இருக்கிறார்.

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியா சென்றுள்ளது.

அகமதாபாத்தில் அக்டோபர் 2ஆம் தேதி தொடங்கிய முதல் போட்டியில் மூன்றாம் நாளிலேயே இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வாகைசூடியது இந்திய அணி.

இந்நிலையில், இரண்டாவது, கடைசி போட்டி டெல்லியில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 10) தொடங்கியது.

இந்திய அணியில் மாற்றமேதும் செய்யப்படவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிராண்டன் கிங், ஜோகன் லெய்ன் நீக்கப்பட்டு, டெவின் இம்லாச், ஆண்டர்சன் ஃபிலிப் சேர்க்கப்பட்டனர்.

பூவா தலையாவில் வென்ற இந்திய அணித்தலைவர் ஷுப்மன் கில் முதலில் தமது அணி பந்தடிக்கும் என அறிவித்தார்.

அதன்படி, ஜெய்ஸ்வாலும் கே.எல்.ராகுலும் தொடக்க வீரராகக் களமிறங்கினர். முதல் போட்டியில் சதமடித்த ராகுல், இம்முறை 38 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

அதன்பின், ஜெய்ஸ்வாலுடன் சுதர்சன் இணைய, இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கை சீரான வேகத்தில் உயரத் தொடங்கியது.

அனைத்துலக அரங்கில் தமது முதல் சதத்தை நிறைவுசெய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 87 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார் சாய் சுதர்சன்.

இருப்பினும், சத வாய்ப்பு கைவிட்டுப்போனது குறித்து அவர் வருந்தவில்லை.

முதல்நாள் ஆட்டத்திற்குப் பின் பேசிய அவர், “உண்மையில், நான் வேகமாக ஓட்டம் குவிக்க வேண்டும் என்று நினைக்காமல், சற்று சுதந்திரமாகவே விளையாடினேன். எனது பங்களிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆயினும், இன்னும் அதிகமாகப் பங்களிக்க விரும்புகிறேன்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்