லிவர்பூல் பதற்றத்தைத் தணிக்க மொரோக்கோவுக்குப் பறந்த சாலா

2 mins read
9a01bd02-dcc9-4a40-b610-a6aa6ab5b055
ஆப்பிரிக்கக் கிண்ணத்தில் எகிப்துக்காக விளையாடவிருக்கும் முகம்மது சாலா. - படம்: ராய்ட்டர்ஸ்

கைரோ: காற்பந்து நட்சத்திரம் முகம்மது சாலா, ஆப்பிரிக்கக் கிண்ணப் போட்டிகளில் பங்கேற்பதற்காக மொரோக்கோ சென்றுள்ளார்.

அங்கு அவர் எகிப்துக்காக விளையாடுவார். லிவர்பூலில் நிலவிய பதற்றத்திலிருந்து சற்று விலகியிருக்க சாலாவுக்கு அது உதவும் என்று பரவலாகக் கருதப்படுகிறது.

ஆப்பிரிக்கக் கிண்ணப் போட்டிகள் அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 21) மொரோக்கோவில் தொடங்குகின்றன. பிரிமியர் லீக் வெற்றியாளரான லிவர்பூலின் பயிற்றுவிப்பாளர் ஆர்ன ஸ்லாட்டுக்கும் சாலாவுக்கும் இடையில் உறவு சுமுகமாக இல்லை.

எகிப்தின் பயிற்றுவிப்பாளர் ஹொசாம் ஹசான், ஆப்பிரிக்கப் போட்டிக்கான அணியை அறிவித்தபோது சாலாவின் இடத்தை உறுதிசெய்தார். அந்தப் போட்டிகளில் பங்குபெறவிருப்பதால், லிவர்பூலுக்காகக் குறைந்தது இரண்டு ஆட்டங்களில் சாலாவால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சென்ற வார இறுதியில் லீட்ஸ் யுனைடெட் குழுவுடனான ஆட்டத்தில் லிவர்பூல் சமநிலை கண்டது. அதனைத் தொடர்ந்து சாலா சொன்ன கருத்துகள் சர்ச்சையில் முடிந்தன. லிவர்பூல் அணி சரியாக விளையாடாததற்குத் தான் ஒரு பலிகடாவாய் ஆக்கப்பட்டதாக சாலா கூறினார். ஸ்லாட்டுடனான தமது உறவு மோசமடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

லீட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மாற்று ஆட்டக்காரரான சாலா இறுதிவரை களமிறக்கப்படவில்லை. சென்ற மாதம் வெஸ்ட் ஹேம் யுனைடெடுக்கு எதிரான போட்டியிலும் அதே நிலைதான். வெற்றியாளர் லீகிலும் இன்ட்டர் மிலனுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் அணியில் சேர்க்கப்படவில்லை.

ஏழு முறை ஆப்பிரிக்கக் கிண்ணத்தை வென்ற எகிப்து, இம்மாதம் (டிசம்பர் 2025) 22ஆம் தேதி நடைபெறவுள்ள அதன் முதல் ஆட்டத்தில் ஸிம்பாப்வேயைச் சந்திக்கிறது. அதிலிருந்து நான்கு நாளுக்குப் பிறகு தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ளும் எகிப்து, டிசம்பர் 29ஆம் தேதி அங்கோலாவுடன் பொருதும்.

குறிப்புச் சொற்கள்