கராச்சி: இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் முன்னாள் கணவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான சோயப் மாலிக், சனா ஜாவேத் எனும் பாகிஸ்தான் நடிகையைத் திருமணம் செய்துகொண்டார்.
தங்களது திருமணப் படத்தை சோயப் மாலிக் தமது ‘எக்ஸ்’ பக்கத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார். சோயப்பிற்கு இது மூன்றாவது திருமணம்.
சோயப்பிற்கும் சானியாவிற்கும் இஸான் என்ற ஐந்து வயது மகன் இருக்கிறார்.
சானியா மிர்சா ஒருதலையாக சோயப் மாலிக்கை மணவிலக்கு செய்துவிட்டதாக அவரது குடும்ப வட்டாரத்தைச் சுட்டி, ‘பிடிஐ’ செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டிலிருந்தே சானியா - சோயப் உறவில் விரிசல் ஏற்பட்டுவிட்டது என்றும் அவர்கள் இருவரையும் சேர்ந்து பார்க்க முடிவதில்லை என்றும் செய்திகள் வெளியாகின.
சில நாள்களுக்குமுன் சானியாவின் இன்ஸ்டகிராம் பக்கத்தைப் பின்தொடர்வதையும் சோயப் நிறுத்திக்கொண்டார்.
கடந்த 2010 ஏப்ரலில் இந்தியாவின் ஹைதராபாத் நகரில் சானியா - சோயப் திருமணம் நடைபெற்றது. இந்தியாவின் சிறந்த டென்னிஸ் விளையாட்டாளர்களில் ஒருவரான சானியா 2023ஆம் ஆண்டில் அதிலிருந்து ஓய்வுபெற்றார்.
கடந்த 2020ஆம் ஆண்டில் உமைர் ஜஸ்வால் என்ற பாடகருக்கும் நடிகை சனா ஜாவேத்துக்கும் திருமணம் நடைபெற்றது நினைவுகூரத்தக்கது. ஆயினும், கடந்த இரு மாதங்களுக்கு முன்னரே அவர்களது மணமுறிவு குறித்து தகவல் வெளியானது.