தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தோல்வியுடன் விடைபெற்ற சானியா மிர்சா

2 mins read
9c133e94-f072-4d1d-a43c-75cb72cb7482
படம்: இபிஏ -

மெல்பர்ன்: முக்கியமான இந்திய விளையாட்டு ஆளுமைகளில் ஒருவரான டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, தாம் கலந்துகொண்ட இறுதி கிராண்ட் ஸ்லாம் தொடரில் இறுதிச் சுற்றுவரை முன்னேறி சாதித்தார்.

சக இந்திய வீரர் ரோகன் போபண்ணாவுடன் இணைந்து ஆஸ்திரேலியப் பொது விருதுப் போட்டியில் களமிறங்கிய சானியா, இறுதிப் போட்டியில் தோற்று கிண்ணம் வெல்லும் வாய்ப்பைப் பறிகொடுத்தார்.

இறுதிப் போட்டியில் இந்திய இணை 6-7, 2-6 என்ற கணக்கில் பிரேசிலின் லுய்சா ஸ்டெஃபானி - ரஃபாயல் மேட்டோஸ் இணையிடம் வீழ்ந்தது.

இவ்வாண்டு ஆஸ்திரேலியப் பொது விருதுப் போட்டியே தமது கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியாக இருக்கும் என்றும் முன்னரே அறிவித்திருந்தார் 36 வயதான சானியா.

இன்னும் சில போட்டிகளில் பங்கேற்றபின் ஒரு வீராங்கனையாக டென்னிசுக்கு முழுக்குப் போடவிருக்கிறார் இவர்.

போட்டிக்குப்பின் திடலில் பேசிய சானியாவால் தமது கண்ணீரைக் கட்டுப்படுத்த இயலவில்லை.

"தொழில்முறை டென்னிஸ் ஆட்டக்காரராக எனது பயணம் மெல்பர்னில்தான் தொடங்கியது. இதைவிட வேறு சிறந்த இடத்தில் எனது கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் பயணம் முடிவிற்கு வருவதை என்னால் நினைத்துப் பார்க்க இயலாது.

"என் மகனுக்கு முன்னால் கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டியில் விளையாடுவேன் என்று ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை," என்று சானியா பேசினார்.

இவர் பங்கேற்ற 11வது கிராண்ட் ஸ்லாம் இறுதிப்போட்டி இது. இரட்டையர் போட்டிகளில் ஆறு கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் உட்பட மொத்தம் 43 பட்டங்களை அவர் வென்றுள்ளார்.

மகளிர் இரட்டையர் பிரிவில், மகளிர் டென்னிஸ் சங்கத் தரவரிசையில் 91 வாரங்களுக்கு சானியா முதலிடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.