தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'சீ' காற்பந்து: 1971க்குப் பிறகு மோசமான தோல்வியைச் சந்தித்த சிங்கப்பூர்

1 mins read
baada521-5ddf-409b-8d12-564d146c28db
மலேசியாவின் கோல் வீச்சுகளைத் தடுத்து நிறுத்த முடியாமல் சி்ங்கப்பூரின் தற்காப்பு அரண் தவிடுபொடியானது. படம்: மலேசிய காற்பந்துச் சங்கம் -

தென்கிழக்காசிய விளையாட்டுகளில் 1971க்குப் பிறகு சந்திக்காத படுதோல்வியை சிங்கப்பூர் காற்பந்துக் குழு சந்தித்துள்ளது.

நோன்பென்னில் வியாழக்கிழமை (மே 11) மாலை நடந்த 'பி' பிரிவு ஆட்டத்தில் மலேசியாவிடம் அது 7-0 எனும் கோல் கணக்கில் படுதோல்வியைத் தழுவியது.

ஏற்கெனவே இவ்விரு அணிகளும் அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டன.

எனவே, கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்று கௌரவத்தைக் காப்பாற்றி தலைநிமிர்ந்து நாடு திரும்ப இருதரப்பினரும் முனைப்புடன் களமிறங்கினர்.

ஆனால் மலேசியாவுக்குத்தான் கூடுதல் கோல் பசி இருந்தது.

வலிமை, வேகம் ஆகியவற்றில் மலேசியாவுக்கு ஈடுகொடுக்க முடியாமல் சிங்கப்பூர் ஆட்டக்காரர்கள் தவித்தனர்.

மலேசியாவின் வெற்றிக்கு அதன் நட்சத்திர ஆட்டக்காரர் சரவணன் திருமுருகன் வித்திட்டார்.

சிங்கப்பூர் குழுவுக்கு எதிராக அவர் நான்கு கோல்களைப் போட்டார். அவரைத் தடுத்து நிறுத்த முடியாமல் சி்ங்கப்பூரின் தற்காப்பு அரண் தவிடுபொடியானது.

ஆட்டத்தின் 14வது நிமிடத்திலேயே மலேசியாவின் முதல் கோலை சரவணன் போட்டார்.

ஹகிமி, முகாய்ரி, ஐமான் ஆகியோர் ஏனைய கோல்களைப் போட்டனர்.

மலேசியப் பயிற்றுவிப்பாளர் இளவரசன் இளங்கோவனின் படை இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்று ஆறு புள்ளிகள் பெற்றது.

சிங்கப்பூர் ஓர் ஆட்டத்தில் சமநிலை கண்டு மற்ற ஆட்டங்களில் தோல்வி அடைந்து ஒரு புள்ளி மட்டுமே பெற்றது.