‘சீ கேம்ஸ் 2025’: காற்பந்து, பூப்பந்தில் விமர்சனத்தைச் சந்திக்கும் சிங்கப்பூர் அணிகள்

2 mins read
a4bf17a6-e00e-490f-af35-0c2bfd76bb0a
இந்தத் தென்கிழக்காசிய விளையாட்டுகளில் சிங்கப்பூர் எவ்வாறு செய்தது என்பது குறித்து (இடமிருந்து) சிங்கப்பூர் தேசிய ஒலிம்பிக் சங்க மன்றத் தலைவர் மார்க் சே, ‘டீம் சிங்கப்பூர்’ அணித் தலைவர் லாரன்ஸ் லியாவ், உயர்தர விளையாட்டுச் செயல்பாட்டுக் கழகத் தலைவர் சு சுன் வெய் ஆகியோர் கருத்துரைத்தனர். இந்நிகழ்ச்சி கிராண்ட் ஃபோர்விங்ஸ் கன்வென்‌ஷன் ஹோட்டலில் சனிக்கிழமை (டிசம்பர் 20) நடைபெற்றது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இவ்வாண்டின் தென்கிழக்காசிய விளையாட்டுகளில் (சீ கேம்ஸ்) சிங்கப்பூர் வீரர்கள் இதுவரை இல்லாத அளவில் மொத்தம் 202 பதக்கங்களை வென்றுள்ளனர்.

தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் நடந்த இவ்வாண்டின் தென்கிழக்காசிய விளையாட்டுகளில் சிங்கப்பூர் வீரர்கள் 52 தங்கப் பதக்கங்களையும் 61 வெள்ளிப் பதக்கங்களையும் 89 வெண்கலப் பதக்கங்களையும் வென்றனர். தென்கிழக்காசிய விளையாட்டுகள் வரலாற்றில் தங்களின் சொந்த மண்ணில் நடைபெறாத எல்லா விளையாட்டுகளையும் கருத்தில்கொள்ளும்போது இம்முறை மூன்றாவது ஆக அதிகமான எண்ணிக்கையில் தங்கப் பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளது சிங்கப்பூர்.

எனினும், வட்டார அளவில் பல அணிகள் ‘மிரட்டலாக’ இருப்பதை உள்ளூர் விளையாட்டுத் துறை வல்லுநர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். 2029ஆம் ஆண்டு தென்கிழக்காசிய விளையாட்டுகள் மறுபடியும் சிங்கப்பூரில் நடைபெறவுள்ள நிலையில் அதற்குள் ‘டீம் சிங்கப்பூர்’ அணி மேம்படவேண்டும் என்பதையும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வெளிநாடுகளில் நடந்த தென்கிழக்காசிய விளையாட்டுகளைப் பொறுத்தவரை 2017ல்தான் சிங்கப்பூர் ஆகச் சிறப்பாகச் செய்தது. அந்த விளையாட்டுகளில் சிங்கப்பூர் 58 தங்கப் பதக்கங்களையும் 58 வெள்ளிப் பதக்கங்களையும் 72 வெண்கலப் பதக்கங்களையும் வென்றது.

இவ்வாண்டு விளையாட்டுகளில் எப்போதும்போல் குடியரசு நீர்ப் போட்டிகளில் ஆகச் சிறப்பாகச் செய்தது. அப்போட்டிகளில் 22 தங்கப் பதக்கங்களைக் குவித்தது சிங்கப்பூர்.

சில வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகளும் இடம்பெற்றன. ஆண்கள் 3X3 கூடைப்பந்துப் போட்டியில், கூடைப்பந்துக்குப் போட்டிக்குப் பெயர்போன பிலிப்பீன்சை அதிரவைத்து சிங்கப்பூர் வெள்ளிப் பதக்கம் வென்றது அவற்றில் ஒன்று.

இளையர்கள், மூத்தோர் என இருவகை வீரர்களும் சிங்கப்பூருக்குப் பெருமை சேர்த்தனர். இவ்வாண்டின் விளையாட்டுகள் ‘இளம் துடிப்பு, அனுபவத்தின் சிறப்பு ஆகியவற்றின் படைப்பு’ என்றார் உயர்தர விளையாட்டுச் செயல்பாட்டுக் கழகத்தின் (High Performance Sport Institute) தலைவர் சு சுன்-வெய்.

அதே வேளை, “இவ்வட்டாரம் மிக வேகமாக பெரிய அளவில் மேம்பட்டு வருகிறது. இப்போதெல்லாம் தென்கிழக்காசிய விளையாட்டுகளில் தங்கப் பதக்கங்களை வெல்வதும் சாதனைகளை முறியடிப்பதும் எளிதல்ல.

“விளையாட்டு வீரர்களாக உருவெடுப்போரைத் தொடக்கத்திலேயே அடையாளம் கண்டு நீண்டகாலத்துக்குப் போட்டிபோடக்கூடியவர்களாக அவர்களை வைத்திருக்க நாங்கள் தொடர்ந்து இளையர்களிடம் கவனம் செலுத்தி சீரான கட்டமைப்புகளையும் வழிமுறைகளையும் நம்பிச் செயல்படுவோம்,” என்றும் அவர் விவரித்தார்.

பூப்பந்தில் சிங்கப்பூர் வீரர்கள் இரண்டு வெண்கலப் பதக்கங்களை மட்டும் வென்றனர். லோ கியன் யூ, ஜேசன் டே போன்ற வீரர்கள் எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்யவில்லை. ‘டீம் சிங்கப்பூர்’ தலைவரும் சிங்கப்பூர்ப் பூப்பந்துச் சங்கத்தின் தலைவருமான லாரன்ஸ் லியாவ் பூப்பந்தில் சிங்கப்பூர் சோபிக்காததை ஏற்றுக்கொண்டார்.

அதேபோல், ஆண்கள் காற்பந்துப் போட்டியில் சிங்கப்பூர் சரியாக செய்யாததை சிங்கப்பூர் தேசிய ஒலிம்பிக் மன்றத்தின் தலைவர் மார்க் சே கண்டித்துப் பேசினார். தென்கிழக்காசிய விளையாட்டுகளில் தொடர்ந்து ஆறாவது முறையாக முதல் சுற்றிலேயே வெளியேறியது சிங்கப்பூர்.

சனிக்கிழமை (டிசம்பர் 20) கிராண்ட் ஃபோர்விங்ஸ் கன்வென்‌ஷன் ஹோட்டலில் நடைபெற்ற விளையாட்டுக்குப் பிந்திய விமர்சன நிகழ்ச்சியில் இக்கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

அடுத்த தென்கிழக்காசிய விளையாட்டுகள் 2027ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெறும்.

குறிப்புச் சொற்கள்