33வது தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகள்

மழையால் பேங்காக்கிற்கு இடமாறும் போட்டிகள்

1 mins read
cdbbcf25-2c3d-4d3c-a144-e029c75a0923
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சொங்க்லா மாநிலம், ஹாட் யாய் பகுதி. - படம்; ஏஎஃப்பி

பேங்காக்: வரும் டிசம்பர் 9-20 தேதிகளில் தாய்லாந்தில் 33வது தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

பேங்காக், சொன்புரி, சொங்க்லா ஆகிய மூன்று இடங்களில் போட்டிகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தெற்குத் தாய்லாந்து, குறிப்பாக சொங்க்லா மாநிலம் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பது ஏற்பாட்டாளர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

வெள்ளம் வடிந்தாலும் நோய்த்தொற்று பரவுவதற்கான வாய்ப்பு இருக்கலாம் என்றும் அதனால் விளையாட்டாளர்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படலாம் என்றும் கூறி, சில நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.

இதனையடுத்து, சொங்க்லா நடக்கவிருந்த எல்லாப் போட்டிகளையும் பேங்காக்கிற்கு இடமாற்ற முடிவுசெய்யப்பட்டுள்ளது.

அதன்படி, குத்துச்சண்டை, சீலாட், ஆடவர் காற்பந்து (‘பி’ பிரிவு), சதுரங்கம், ஜூடோ, கபடி, கராத்தே, மல்யுத்தம், பெட்டாங்க், வுஷு ஆகிய பத்து விளையாட்டுகளுக்கான போட்டிகள் சொங்க்லாவிலிருந்து பேங்காக்கிற்கு இடமாறுகின்றன. அதாவது, 109 தங்கப் பதக்கங்களுக்கான போட்டிகள் சொங்க்லாவிலிருந்து பேங்காக்கிற்கு மாற்றப்பட்டுள்ளன.

சொங்க்லாவிற்கு ஏற்கெனவே விமானப் பயணச்சீட்டுகளையும் அங்கு தங்குமிடத்திற்கும் முன்பதிவு செய்திருக்கலாம் என்பதால் அதனால் மற்ற நாடுகளுக்குப் பண இழப்பு ஏற்படலாம். இந்நிலையில், போட்டியை ஏற்று நடத்தும் நாடாக அதனை ஈடுசெய்வது குறித்து தாய்லாந்து பரிசீலிக்க வேண்டியுள்ளது என்று அந்நாட்டின் தேசிய ஒலிம்பிக் குழுவின் துணைப் பொதுச் செயலாளர் சலித்ரத் சந்தருபெக்சா தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்