லிவர்பூல்: லீக் கிண்ணக் காற்பந்து அரையிறுதிச் சுற்று முதல் ஆட்டத்தில் லிவர்பூல் குழு 2-1 என்ற கோல் கணக்கில் ஃபுல்ஹமை வீழ்த்தியது.
ஆட்டத்தின் 19ஆம் நிமிடத்தில் கோலை விட்டுத் தந்து பின்தங்கியது லிவர்பூல். ஆயினும், இரண்டாம் பாதியில் எழுச்சியுடன் ஆடி, இரண்டு கோல்களை அடித்து அக்குழு வெற்றியைச் சுவைத்தது.
கர்ட்டிஸ் ஜோன்ஸ் 68ஆம் நிமிடத்திலும் மாற்று வீரராக வந்த கோடி ஹக்போ 71ஆம் நிமிடத்திலும் லிவர்பூல் சார்பில் கோலடித்து, ஆட்டத்தைத் திசைதிருப்பினர்.
முதல் கோலை விட்டுக் கொடுத்து, பின்னர் எழுச்சியுடன் ஆடி லிவர்பூல் வென்றிருப்பது இந்தப் பருவத்தில் இது ஏழாவது முறை.
இதற்கு வீரர்களின் தன்னம்பிக்கையே காரணம் எனக் குறிப்பிட்டார் லிவர்பூல் நிர்வாகி யர்கன் கிளோப்.
இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இம்மாதம் 24ஆம் தேதி வியாழக்கிழமை நடக்கவிருக்கிறது.