ஏழு காற்பந்து வீரர்கள் மலேசிய மோசடிக்கு இரையானவர்கள்: அனைத்துலகச் சங்கம்

2 mins read
fb221a99-8f75-48a4-99e9-64c80af38529
ஃபிஃபா விசாரணையில், ஏழு வீரர்களில் எவருக்கும் மலேசியாவில் பிறந்த பெற்றோர் அல்லது தாத்தா பாட்டி இல்லை என்பது தெரியவந்தது. - படம்:மலேசியக் காற்பந்துக் குழு ஃபேஸ்புக்

கோலாலம்பூர்: மலேசிய தேசியக் காற்பந்துக் குழு தகுதி ஊழலில் சிக்கிய ஏழு வெளிநாட்டு வீரர்களும் காற்பந்து மோசடிக்கு இரையானவர்கள் என்றும், அவர்களின் 12 மாதத் தடைகள் முற்றிலும் நியாயமற்றவை என்றும் உலகளாவிய காற்பந்து வீரர்களின் சங்கமான ஃபிஃப்புரோ (FIFPro) தெரிவித்துள்ளது.

வெளிநாட்டில் பிறந்த வீரர்கள் மலேசிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்று தவறான ஆவணங்களைச் சமர்ப்பித்ததற்காக, உலக காற்பந்து நிர்வாக அமைப்பான அனைத்துலக காற்பந்துச் சம்மேளனம் (ஃபிஃபா), அந்த வீரர்களைத் தடை செய்ததுடன் மலேசியக் காற்பந்துச் சங்கத்துக்கு US$440,000 (S$570,900) அபராதம் விதித்தது.

இதன் தொடர்பில் மலேசியக் காற்பந்துச் சங்கம், விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

ஜூன் மாதம் வியட்னாமுக்கு எதிரான ஆசியக் கிண்ணத் தகுதிச் சுற்றில் மலேசியா 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த ஆட்டத்தில் இரண்டு வெளிநாட்டு ஆட்டக்காரர்கள் கோல் போட்டனர். அது பற்றி எழுப்பப்பட்ட புகாரைத் தொடர்ந்து ஃபிஃபா விசாரணையைத் தொடங்கியது.

ஹெக்டர் ஹெவெல், ஜான் இராசபால், கேப்ரியல் அரோச்சா, ஃபகுண்டோ கார்செஸ், ரோட்ரிகோ ஹோல்கடோ, இமானோல் மச்சுகா, ஜோவா ஃபிகியூரிடோ ஆகிய ஏழு காற்பந்து வீரர்கள் எவருக்கும் மலேசியாவில் பிறந்த பெற்றோர் அல்லது தாத்தா பாட்டி இல்லை என்று விசாரணையில் தெரிய வந்தது. இது தேசிய அணிக்குத் தேர்வு செய்யப்படுவதற்குத் தேவையான தகுதிகள்.

ஃபிஃப்புரோ ஏழு வீரர்களுக்குத் தனது முழு ஆதரவையும் அளித்து, அவர்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை என்று திங்கட்கிழமை (டிசம்பர் 1) அன்று தெரிவித்தது.

“காற்பந்து தொடர்பான அனைத்து நடவடிக்கைகளிலிருந்தும் 12 மாத தடை என்று அவர்கள் மீது விதிக்கப்பட்ட தடைகள், சம்பவத்தில் குறிப்பிட்ட சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு பார்க்கையில் அவை முற்றிலும் நியாயமற்றவை,” என்று அது ஓர் அறிக்கையில் கூறியுள்ளது.

“இந்த விவகாரத்தில் காற்பந்து வீரர்கள் உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள் என்பது தெளிவாகிறது,” என்றும் ஃபிஃப்புரோ கூறியது.

“அனைத்து நடவடிக்கைகளும் அவர்களின் கட்டுப்பாட்டிற்கு வெளியே உள்ள நிறுவனங்களால் கையாளப்பட்டன. ஆனால் இப்போது அவர்கள் தங்கள் காற்பந்துச் சங்கங்களிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுவதையும், தவறு இழைக்காவிட்டாலும் தொடரும் கடுமையான விளைவுகளையும் எதிர்நோக்குகின்றனர்,” என்றும் அது மேலும் சொன்னது.

தான் வேண்டுமென்றே எந்த தவறும் செய்யவில்லை என்று மலேசியக் காற்பந்துச் சங்கம் தெரிவித்துள்ளது. அக்டோபரில், அதன் தலைமைச் செயலாளரை அது இடைநீக்கம் செய்து, இச்சம்பவத்தை விசாரிக்க ஒரு சுயேச்சைக் குழுவை நியமித்தது.

மலேசியக் காற்பந்துச் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து முறையான விசாரணையைத் தொடங்குவதாகவும் ஃபிஃபா கூறியது. அதன் கண்டுபிடிப்புகள் பரபரப்பை ஏற்படுத்தியது. ரசிகர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,மலேசியக் காற்பந்துச் சங்கம், மலேசிய தேசிய பதிவுத் துறை மற்றும் உள்துறை அமைச்சுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் குரல் எழுப்பினர்.

குறிப்புச் சொற்கள்