அகமதாபாத்: இந்தியாவின் குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் செவ்வாய்க்கிழமை (மே 21) நடைபெற்ற இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மாபெரும் வெற்றி பெற்ற கோல்கத்தா நைட் ரைடர்ஸ், நான்காவது முறையாக இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளது.
கோல்கத்தாவின் அசத்தல் வெற்றிக்கு அடித்தளம் அமைத்த அதன் பந்துவீச்சாளர்கள், ஹைதராபாத் அணியை 159 ஓட்டங்களில் நடையைக் கட்ட வைத்தனர்.
அதன் பிறகு கோல்கத்தா அணிக்காக முறையே மூன்றாம், நான்காம் வீரர்களாகக் களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர்-ஷ்ரேயாஸ் ஐயர் இணை, 13.4 ஓவர்களில் ஓட்ட இலக்கை எட்டினர்.
ஆட்டம் முடிந்தவுடன், கோல்கத்தா அணியின் இணை உரிமையாளரான பாலிவுட் நடிகர் ஷாருக்கான், தம் மகள் சுஹானா, இளைய மகன் ஆப்ராமுடன் சேர்ந்து நரேந்திர மோடி விளையாட்டரங்கைச் சுற்றி வலம் வந்தார்.
ரசிகர்களிடம் கையசைத்தபோது, திடலில் நேரடியாக ஒளிபரப்பான ஜியோ சினிமாவின் ஐபிஎல் 2024 இந்தி நிகழ்ச்சியில் அவர்கள் தெரியாமல் குறுக்கிட்டனர்.
நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஆகாஷ் சோப்ரா, பார்திவ் பட்டேல், சுரேஷ் ரய்னா ஆகியோரிடம் உடனடியாக மன்னிப்புக் கேட்டுக்கொண்ட ஷாருக்கான், அவர்களைக் கட்டியணைத்ததுடன் ஒளிபரப்பைப் பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்களிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
அதன் பிறகு திடலைச் சுற்றி அவர் தம் பிள்ளைகளுடன் நடையைத் தொடர்ந்தார்.