தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியாவிற்கு எதிராக ஐந்து விக்கெட் வீழ்த்திய பிறகுதான் ‘செல்ஃபி’; பாகிஸ்தான் வீரர் உறுதி

2 mins read
41cf12c2-594b-46fe-9f8b-654709032ec2
அகமதாபாத் மோடி விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை தீவிரப் பயிற்சியில் ஈடுபட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷகீன் ஷா அஃப்ரிடி. - படம்: இபிஏ

அகமதாபாத்: இந்தியா-பாகிஸ்தான் அணிகள் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் சனிக்கிழமை மோதவுள்ள நிலையில், அதுகுறித்த எதிர்பார்ப்பும் பரபரப்பும் அதிகமாகிவிட்டது.

இதுவரை தாங்கள் ஆடிய இரு போட்டிகளிலும் அவ்விரு அணிகளும் வென்றிருப்பதால் ‘ஹாட்ரிக்’ வெற்றியைச் சுவைக்கப்போவது யார் என்பதை அறிய உலகம் முழுதுமுள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்.

அப்போட்டியில் மாற்றத்த்தையும் திடீர் திருப்பத்தையும் ஏற்படுத்தக்கூடிய வீரர்களில் ஒருவராக அறியப்படுகிறார் பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் ஷகீன் ஷா அஃப்ரிடி.

அண்மையில் நடந்த ஆசியக் கிண்ணப் போட்டி தவிர்த்து, கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணிக்கு அவர் கடுஞ்சவாலாக இருந்து வருகிறார்.

இதனிடையே, அகமதாபாத் அரங்கில் பயிற்சியை முடித்துவிட்டுத் திரும்பியபோது ஊடகத்தினர் சிலர் தற்படம் (செல்ஃபி) எடுத்துக்கொள்வதற்காக அஃப்ரிடியை அணுகினர்.

அப்போது, “உறுதியாக எடுத்துக்கொள்வோம். ஆனால், ஐந்து விக்கெட் வீழ்த்திய பிறகு!” என்று அவர் நம்பிக்கையுடன் கூறியதாக ‘ரெவ்ஸ்போர்ட்ஸ்’ செய்தி தெரிவிக்கிறது.

முதல் இரு போட்டிகளிலும் அஃப்ரிடியின் செயல்பாடு குறிப்பிடும்படியாக இல்லை. அவ்விரு போட்டிகளிலும் சேர்த்து இரண்டு விக்கெட்டுகளை மட்டடுமே அவர் வீழ்த்தியுள்ளார்.

ஆனாலும், அவர் தமது உச்ச ஆட்டத்திறனை மீட்டெடுப்பார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர் ஆசம்.

“ஆட்டத்தின் முதல் பத்து ஓவர்களையும் அடுத்த பத்து ஓவர்களையும் வெவ்வேறாக அணுகுவோம். அதற்கேற்ப திட்டமிட்டு வருகிறோம். நசீம் ஷா இல்லாதது குறைதான். அஃப்ரிடி எங்களது சிறந்த பந்துவீச்சாளர். நாங்கள் அவரை நம்புகிறோம். அவரும் தன்மீது நம்பிக்கை கொண்டுள்ளார். ஓரிரு ஆட்டங்களில் செயல்பாடு மோசமாக இருப்பது குறித்து நாங்கள் கவலைப்படவில்லை,” என்று செய்தியாளர்களிடம் பாபர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்