டாக்கா: பங்ளாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னணி ஆட்டக்காரர் ஷாகிப் அல் ஹசனுக்குப் பந்துவீச தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அனைத்துலக கிரிக்கெட் மன்றத்தின் (ஐசிசி) அங்கீகாரம் பெற்ற அனைத்து தேசியக் கூட்டமைப்புகளும் அவருக்குத் தடைவிதித்து இருப்பதாக பங்ளாதேஷ் கிரிக்கெட் வாரியம் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 15) ஓர் அறிக்கை மூலம் தெரிவித்தது.
முன்னதாக, விதிமுறைகளுக்கு எதிராகப் பந்துவீசுவதாகக் கூறி ஷாகிப்பிற்கு இங்கிலாந்து, வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் தடை விதித்திருந்தது.
இங்கிலாந்தில் உள்ள லாஃப்பரோ பல்கலைக்கழகத்தில் இம்மாதம் நடந்த பந்துவீச்சு மதிப்பீட்டில் ஷாகிப் தோல்வியடைந்தார்.
கடந்த செப்டம்பரில் இங்கிலாந்தில் நடந்த கவுன்டி போட்டியின்போது, 37 வயதான ஷாகிப் விதிகளுக்கு மாறாகப் பந்துவீசுவதாகச் சந்தேகம் இருப்பதாகப் புகார் அளிக்கப்பட்டது.
ஒரு கிரிக்கெட் வீரருக்குத் தேசிய கிரிக்கெட் வாரியம் ஒன்று தடை விதித்தால் அத்தடையை ஐசிசி தானாகவே ஏற்றுக்கொண்டு, உள்ளூர் போட்டிகளிலும் அனைத்துலகப் போட்டிகளிலும் அவருக்குத் தடைவிதிக்கப்படும்.
பங்ளாதேஷில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினா தலைமையிலான அரசாங்கத்தில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்ததால் ஷாகிப்பின் அனைத்துலக கிரிக்கெட் வாழ்க்கையும் கேள்விக்குறி ஆகியுள்ளது.