தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கிடைத்த வாய்ப்பை இரு கைகளாலும் இறுகப் பற்றிய இந்திய வீரர்

2 mins read
dc00ff8e-7171-4ada-8b18-16b030b69f4a
நியூசிலாந்து வீரர் மேட் ஹென்ரியை முதல் பந்திலேயே வெளியேற்றிய மகிழ்ச்சியில் முகம்மது ஷமி. - படம்: ராய்ட்டர்ஸ்

தர்மசாலா: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணிப் பந்துவீச்சாளர்களில் ஒருவராகத் திகழ்கின்றபோதும், நடப்பு உலகக் கிண்ணத் தொடரில் முகம்மது ஷமிக்கு இந்திய அணி விளையாடிய ஐந்தாவது போட்டியில்தான் வாய்ப்பு கிடைத்தது.

ஆயினும், இனியும் தன்னை வெளியில் காக்க வைக்க முடியாது என்பதை அவர் தன் செயல்பாட்டால் உணர்த்திவிட்டார்.

நியூசிலாந்து அணிக்கெதிராக 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டியில், ஐந்து விக்கெட்டுகளைச் சாய்த்து ஆட்ட நாயகன் விருதைக் கைப்பற்றினார் ஷமி.

தான் வீசிய முதல் பந்திலேயே நியூசிலாந்து தொடக்க ஆட்டக்காரர் வில் யங்கை ஆட்டமிழக்கச் செய்தார் அவர்.

நியூசிலாந்து அணி 300 ஓட்டங்களை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஷமி கடைசி நேரத்தில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி, அதற்கு முட்டுக்கட்டை போட்டார்.

போட்டியில் வென்றபின் அவரைப் பாராட்டிப் பேசிய இந்திய அணித்தலைவர் ரோகித் சர்மா, “ஷமி தனக்குக் கிடைத்த வாய்ப்பை இரு கைகளாலும் இறுகப் பற்றிக்கொண்டார். அனுபவமிக்க, திறமை வாய்ந்த வீரரான அவர், ஆடுகளச் சூழலையும் சரியாகப் பயன்படுத்திக்கொண்டார்,” என்றார்.

இதனிடையே, முதல் போட்டியில் சிறப்பாகச் செயல்பட்டு, நம்பிக்கையைப் பெறுவது முக்கியம் என்று சொன்னார் ஷமி.

“அந்த நம்பிக்கையைப் பெறுவதற்கு முதல் போட்டி கைகொடுத்தது. அணி சிறப்பாக விளையாடி வரும்போது, பதினொருவரில் இடம் கிடைக்காமல் திடலுக்கு வெளியே அமர்ந்திருப்பது கடினமான செயலன்று. அவர்கள் உங்கள் சக வீரர்கள்தான்! அவர்கள் சிறப்பாக விளையாடும்போது அவர்களுக்கு ஆதரவு வழங்கவே வேண்டும்.அணிக்கு நல்லது என்றால், எனக்கும் அதில் உடன்பாடுதான்,” என்றார் அவர்.

இங்கிலாந்துக்கு எதிராக வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கவுள்ள போட்டியில் ஹார்திக் பாண்டியா அணிக்குத் திரும்பிவிடுவார். அப்போட்டியில், இந்திய அணி இரண்டு வேகப் பந்துவீச்சாளர்களுடன் விளையாட நேர்ந்தால், ஷமி, சிராஜ் இருவரில் ஒருவர்க்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கலாம்.

குறிப்புச் சொற்கள்