200 மீட்டர் ஓட்டத்தில் மீண்டும் தங்கம் வென்றார் சாந்தி பெரேரா

200 மீட்டர் ஓட்டத்தில் மீண்டும் தங்கம் வென்றார் சாந்தி பெரேரா

1 of 2
படம்: ராய்ட்டர்ஸ்
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

27 Sep 2026 - 6:46 pm

2 mins read

நகோயா: ஞாயிற்றுக்கிழமையன்று (செப்டம்பர் 27) பலோமா மிசுஹோ விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில் முதலிடம் பிடித்ததன் மூலம், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தொடர்ந்து இரண்டு முறை 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்ற முதல் பெண்மணி என்ற பெருமையை சிங்கப்பூரின் சாந்தி பெரேரா நிலைநாட்டினார்.

சீனாவின் சென் யுஜி, தொடக்கத்தில் 0.15 நொடி வேகத்தில் மற்றவர்களை முந்திச் சென்றாலும், பந்தயத்தின் இறுதிப் பகுதியில் சாந்தி பெரேரா தமது இளம் போட்டியாளரை முந்திச் சென்று, 22.78 நொடி என்ற அந்தப் பருவத்தின் சிறந்த நேரத்துடன் தங்கப் பதக்கத்தை வென்றார்.

செப்டம்பர் 25ஆம் தேதியன்று ஆசிய விளையாட்டுகள் சாதனை நேரத்துடன் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்ற சென், இப்போட்டியில் 22.93 நொடி என்ற நேரத்தைப் பதிவு செய்து வெள்ளிப் பதக்கத்துடன் திருப்தியடைய வேண்டியதாயிற்று. அதேவேளையில், இந்தியாவின் ஹரிதா பத்ரா 23.20 நொடி என்ற நேரத்தில் பந்தயத்தை நிறைவு செய்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

1951ல் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியதிலிருந்து, ஐந்து ஆண் ஓட்டப்பந்தய வீரர்கள் 200 மீட்டர் ஓட்டத்தில் தொடர்ச்சியாக இரண்டு முறை தங்கம் வென்றுள்ளனர். ஆனால், சாந்திக்கு முன்பு எந்த ஓட்டப்பந்தய வீராங்கனையும் இந்தச் சாதனையை நிகழ்த்தியதில்லை.

செப்டம்பர் 27ஆம் தேதியன்று 200 மீட்டர் ஓட்டத்தில் பட்டம் வென்றதன் மூலம், இரண்டு நாள்களுக்கு முன்பு 100 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்ற 30 வயதான சாந்தி, தற்போது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நான்கு பதக்கங்களைப் பெற்றுள்ளார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஹாங்சோவில் நடைபெற்ற முந்தைய ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும், சாந்தி 100 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளியும், 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கமும் வென்று, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தப் போட்டியில் சிங்கப்பூர் 49 ஆண்டுகளாகப் பதக்கம் வெல்லாமல் இருந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இதற்கிடையே, சாந்தியின் வரலாற்றுச் சாதனை வெற்றி குறித்து அதிபர் தர்மன் சண்முகரத்னம் தமது சமூக ஊடகப் பக்கங்களில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“அற்புதம்! சாந்தி மீண்டும் தமது உடல், மனம், உணர்வு ரீதியான முழு ஆற்றலையும் வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இருமுறை வெற்றி பெற்ற முதல் வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையையும் படைத்தார்.

“இரண்டு நாள்களுக்கு முன்பு 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்றிருந்த சீனாவின் சென் யுஜியை விட, சாந்தி மிகத் தெளிவாக முன்னிலை வகித்து வெற்றி பெற்றார்,” என்று அதிபர் தர்மன் குறிப்பிட்டிருந்தார்.

குறிப்புச் சொற்கள்
ஆசிய விளையாட்டுதங்கப் பதக்கம்சாந்தி பெரேரா