புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த பந்தடிப்பாளர்களில் ஷிகர் தவானும் ஒருவர்.
38 வயதான தவான் (படம்), அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். சமூக ஊடகத்தில் காணொளி வாயிலாக அந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
“வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு நகர்வது முக்கியமானது. அதனால் தான் நான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கிறேன். இந்திய அணிக்காக நீண்ட நாட்கள் விளையாடிய மனநிறைவுடன் விடை பெறுகிறேன்” என தவான் தெரிவித்தார்.
தவான் கடைசியாக 2022ஆம் ஆண்டு இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடினார். அதன் பிறகு அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
2010ஆம் முதல் முதல் இந்திய அணிக்காக அனைத்துலக கிரிக்கெட்டில் விளையாடிய தவான், தமது அதிரடியான ஆட்டத்தால் பல வெற்றிகளை பெற்றுத்தந்துள்ளார்.
இடது கை தொடக்க ஆட்டக்காரரான தவான் 34 டெஸ்ட், 68 டி20,167 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். அவர் மொத்தமாக 10,867 ஓட்டங்கள் குவித்துள்ளார்.
தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் விளாசியவர் தவான். ஐசிசி தொடர்களில் அபாரமாக ஆடி ஓட்டங்கள் குவிப்பதில் தவான் கெட்டிக்காரர்.
மேலும் அவர் 222 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 6,769 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
சதம் விளாசிய பிறகும் ‘கேட்ச்’ பிடித்த பிறகும் தவான் தனது தொடையை தட்டிக் கொண்டாடுவார். அது தனித்துவமான கொண்டாட்டமாக இருந்தது.

