இந்தூர்: இரண்டாவது டி20 போட்டியிலும் வாகைசூடி, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றி, 2-0 என முன்னிலை வகிக்கிறது இந்திய அணி.
முதலில் பந்தடித்த ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 172 ஓட்டங்களை எடுத்தது.
பின்னர் ஆடிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் (68 ஓட்டங்கள்) சிவம் துபேயும் (ஆட்டமிழக்காமல் 63 ஓட்டங்கள்) அதிரடியாகப் பந்தடித்தனர். இதனையடுத்து, 15.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டி, ஆறு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.
தொடர்ந்து இரண்டாவது போட்டியில் அரைசதமடித்த துபே, தமது சிறப்பான செயல்பாட்டிற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் அதன் தலைவர் மகேந்திர சிங் டோனியுமே காரணம் என்றார்.
“சென்னை அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாடியபோது, ‘உன்னால் சிறப்பாகப் பந்தடிக்க முடியும்’ என்று டோனி என்னிடம் சொன்னார். ஆனால், விவேகமாகச் செயல்பட வேண்டும் என்றார் அவர். அதனால், எனது பலம் அறிந்து, என்னால் எதில் சிறப்பாகச் செயல்பட முடியும் என்று கவனம் செலுத்தினேன்,” என்றார் துபே.
இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான மூன்றாவது, கடைசி டி20 போட்டி புதன்கிழமை (ஜனவரி 17) பெங்களூரில் இடம்பெறவுள்ளது.