சிங்கப்பூர் அணி, ஆசியான் வெற்றியாளர் கிண்ண அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
ஜாலான் புசார் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 7) இந்தோனீசியாவுக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் அது சமநிலை கண்டது.
இரு அணிகளும் தரப்புக்கு ஒரு கோல் போட்டன. இந்தோனீசியாவின் ரக்னார் ஒரட்மங்கோயென் 47வது நிமிடத்தில் ஆட்டத்தின் முதல் கோலைப் போட்டார். பின்னர், 66வது நிமிடத்தில் சிங்கப்பூரின் இல்ஹான் ஃபாண்டி கோலைப் புகுத்தி ஆட்டத்தைச் சமன்படுத்தினார்.
சிங்கப்பூரின் 61வது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் காற்பந்துச் சிங்கங்கள் அந்தச் சாதனையை நாட்டிற்குப் பரிசாக வழங்கியுள்ளனர்.
சிங்கப்பூர் அரையிறுதியில் ‘பி’ பிரிவின் வெற்றியாளரைச் சந்திக்கும். அந்தப் பிரிவில் தாய்லாந்து, மலேசியா, ஃபிலிப்பீன்ஸ், மியன்மார், லாவோஸ் ஆகியவை இருக்கின்றன. தற்போதைய நிலையில், தாய்லாந்து ஒன்பது புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
அரையிறுதியின் முதல் சுற்று ஆட்டம் சிங்கப்பூரில் இம்மாதம் 15ஆம் தேதி நடைபெறும். மூன்று நாள்களுக்குப் பிறகு அரையிறுதியின் இரண்டாம் சுற்று ஆட்டம் மற்றோர் அணியின் நாட்டில் இடம்பெறும்.
சிங்கப்பூர், இந்தப் போட்டிகளில் 8 புள்ளிகளைப் பெற்று ‘ஏ’ பிரிவில் இரண்டாம் நிலையில் உள்ளது. ஏழு முறை விருதை வென்ற தாய்லாந்துடன் சிங்கப்பூர் அணி பொருதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘ஏ’ பிரிவில் முதல் நிலையில் வியட்னாம் இருக்கிறது.
சிங்கப்பூர் அணி இதற்கு முன்னர் ஆடிய ஆட்டங்களில் தோல்வியுறவில்லை.
கம்போடியாவை 2-1 எனும் கோல் கணக்கில் அது வெற்றிபெற்றது. திமோர் லெஸ்டேயை 2-0 எனும் கோல் எண்ணிக்கையில் சிங்கப்பூர் வீழ்த்தியது. வியட்னாமுடன் அது சமநிலை கண்டது.


