தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஃபிஃபா இளையர் காற்பந்துப் போட்டியை சிங்கப்பூர் ஏற்று நடத்தக்கூடும்

2 mins read
273f7091-3912-4d26-be6f-acb6a4b79829
2025ஆம் ஆண்டு நடைபெற்ற ஃபிஃபா நிர்வாகக் காற்பந்து உச்சநிலை மாநாட்டின் இரண்டாவது அமர்வுக்குப் பிறகு, ஃபிஃபா தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவும் (வலது) சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத் தலைவர் ஃபாரெஸ்ட் லியும் சந்தித்தனர். - படம்: கியானி இன்ஃபான்டினோ இன்ஸ்டகிராம்

15 வயதுக்குட்பட்டோருக்கான காற்பந்துத் திருவிழாவாகக் கருதப்படும் அனைத்துலக காற்பந்துச் சம்மேளனத்தின் (ஃபிஃபா) இளையர் போட்டி, எதிர்காலத்தில் சிங்கப்பூரில் நடத்தப்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் சிங்கப்பூர் லயன்ஸ் அணி 2026ஆம் ஆண்டு நடைபெறும் காற்பந்துக் கூட்டமைப்புக்கிடையிலான ஃபிஃபா தொடர் நட்புப் போட்டியில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்காவில் நடந்து வரும் காற்பந்துச் சங்க உலகக் கிண்ணப் போட்டியை ஏற்று நடத்தும் நகரங்களில் ஒன்றான மையாமியில் ஜூன் 19-21 தேதிகளில் நடைபெற்ற ஃபிஃபா நிர்வாக காற்பந்து உச்சநிலை மாநாடு 2025ன் போது, ​​ஃபிஃபா தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவுக்கும் சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்தின் (எஃப்ஏஎஸ்) தலைவர் ஃபாரஸ்ட் லிக்கும் இடையேயான சந்திப்பில் இந்த யோசனைகள் எழுந்தன.

இரண்டு போட்டிகள் பற்றிய பேச்சுவார்த்தையை உறுதிப்படுத்திய திரு இன்ஃபான்டினோ, ஜூன் 21 அன்று ஃபிஃபா இணையத்தளத்திடம் இதுபற்றி கூறினார்:

“சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத் தலைவர் ஃபாரஸ்ட் லீயும் நானும் மையாமியில், அவரது அழகான நாட்டில் காற்பந்தை முன்னோக்கி எடுத்துச் செல்ல எவ்வாறு தொடர்ந்து ஒத்துழைக்கலாம் என்பது குறித்து ஆக்கபூர்வமான விவாதம் நடத்தினோம்.

“2021ஆம் ஆண்டு நான் சிங்கப்பூருக்குச் சென்றபோது, ​​அந்நாட்டு மக்கள் காற்பந்து மீது கொண்டுள்ள மிகுந்த ஆர்வத்தை உணர்ந்தேன். மேலும் அது விளையாட்டை வளர்ப்பதற்காக மேற்கொள்ளப்படும் பணிகளில் பிரதிபலித்தது.

“ஃபிஃபா ஃபார்வர்ட் மற்றும் பள்ளிகளுக்கான ஃபிஃபா காற்பந்து மூலம் எஃப்ஏஎஸ்சுடன் ஃபிஃபா ஒரு நீண்டகால, பயனுள்ள உறவைக் கொண்டுள்ளது. மேலும் தலைவர் லி மற்றும் அவரது குழுவினருக்கு ஃபிஃபாவின் முழு ஆதரவையும் வழங்கியதுடன் அவரது அண்மைய வெற்றிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டேன்,” என்றார் திரு இன்ஃபான்டினோ.

2013ஆம் ஆண்டிலேயே, இளையர் உலகக் கிண்ணப் போட்டியை ஏற்று நடத்த சிங்கப்பூர் விருப்பம் தெரிவித்திருந்தது. 2023ஆம் ஆண்டில், 2025ஆம் ஆண்டில் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கிண்ணப் போட்டியையும், 2025 மற்றும் 2029க்கு இடையில், 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணப் போட்டியையும் இந்தோனேசியாவுடன் இணைந்து நடத்துவது குறித்து விவாதித்து, பரிசீலிப்பதற்கான ஒரு கடிதத்தில் எஃப்ஏஎஸ் கையெழுத்திட்டது.

மேலும் தகவலுக்கு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், எஃப்ஏஎஸ்சைத் தொடர்புகொண்டுள்ளது. அதே நேரத்தில் லி, ஃபிஃபா இணையத்தளத்திடம், சிங்கப்பூர் 15 வயதுக்கு உட்பட்டோருக்கான அனைத்துலக நிகழ்வை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தானும் இன்ஃபான்டினோவும் விவாதித்ததாகக் கூறினார்.

குறிப்புச் சொற்கள்