பேங்காக்: ஆசியான் வெற்றியாளர் காற்பந்துக் கிண்ணத்தின் அரையிறுதிச் சுற்று இரண்டாம் ஆட்டத்தில் தாய்லாந்து அணியை 2-1 எனும் கோல் கணக்கில் சிங்கப்பூர் அணி வீழ்த்தியது.
இந்த ஆட்டம் தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் உள்ள ராஜமங்களா விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 18) இரவு நடைபெற்றது.
இரண்டாவது ஆட்டத்தில் சிங்கப்பூர் வெற்றி பெற்றபோதும், ஒட்டுமொத்த கோல் அடிப்படையில் 4-3 என அது தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறியது.
சிங்கப்பூரின் ஜாலான் புசார் விளையாட்டரங்கில் நடைபெற்ற அரையிறுதிச் சுற்றின் முதல் ஆட்டத்தில் தாய்லாந்து 3-1 எனும் கோல் கணக்கில் சிங்கப்பூரைத் தோற்கடித்தது.
தாய்லாந்து அணி ஆகஸ்ட் 22 ஆம் தேதியன்று நடைபெறவுள்ள இரண்டு சுற்றுகளைக் கொண்ட இறுதி ஆட்டத்தின் முதல் சுற்றில் நடப்பு வெற்றியாளர் வியட்னாமை அல்லது மலேசியாவை எதிர்கொள்ளும்.
மற்றோர் அரையிறுதி ஆட்டத்தில், மலேசியாவுக்கு எதிராக நடைபெற்ற முதல் ஆட்டத்தில் வியட்னாம் 2-0 எனும் கோல் கணக்கில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது.
இரண்டாவது ஆட்டம் வியட்னாமில் நடைபெறுகிறது.
இப்போட்டியில் 50,000 அமெரிக்க டாலர் (S$63,900) பரிசுத் தொகையைப் பெற்றுள்ள சிங்கப்பூர் அணி, அடுத்து செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 4 வரை நடைபெறவுள்ள ஃபிஃபா ஆசியான் கிண்ணப் போட்டிக்கு ஆயத்தமாக வேண்டியுள்ளது.
இதில் ‘பிரிமியர்' நிலையின் ‘ஏ’ பிரிவில், போட்டியை ஏற்றுநடத்தும் இந்தோனீசியா, மலேசியா மற்றும் இந்தியாவுக்குப் பதிலாக சேர்க்கப்பட்டுள்ள பங்ளாதேஷ் ஆகிய அணிகளுடன் சிங்கப்பூர் மோதவுள்ளது.


