பாரிஸ்: பெண்களுக்கான மிக பரபரப்பான வாள்வீச்சு போட்டியின் முடிவில், சிங்கப்பூரின் வாள்வீச்சு வீராங்கனையான அமிதா பெர்தியர் தனது தொடக்க போட்டியில் உலகத்தர வரிசையில் 11வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் லோரன் ஸ்கிரக்சிடம் 15-13 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வி கண்டுள்ளார்.
கிராண்ட் பாலாய் அரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இரு போட்டியாளர்களும் சற்று சளைக்காமல் விறுவிறுப்புடன் ஆடினர். போட்டியின் முற்பாதியின் முடிவில் இருவரும் 9-9 என்ற புள்ளிக்கணக்கில் சமநிலையில் இருந்தனர். ஆனால், பிற்பாதியில் ஸ்கிரக்ஸ், சிறப்பாக ஆடி போட்டியை 15-13 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
உலகத் தர வரிசையில் 35வது இடத்தில் உள்ள 23 வயது பெர்தியர், 2021 தோக்கியோ ஒலிம்பிக்கில் முதன் முதலாக பங்கேற்றபோதும் தோல்வி கண்டார்.
சிஙகப்பூரின் மற்றுமொரு வாள்வீச்சு போட்டியாளரான கிரியா டிகானா, ஜூலை 27ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் இத்தாலியின் அல்பெர்ட்டா சந்துசியோவிடம் 15-10 புள்ளிக் கணக்கில் தோல்வி கண்டார்.