தேசிய விளையாட்டரங்கில் பராகுவே, பிரேசிலை எதிர்கொள்ளும் சிங்கப்பூர்

தேசிய விளையாட்டரங்கில் பராகுவே, பிரேசிலை எதிர்கொள்ளும் சிங்கப்பூர்

2 mins read
f545a165-e99e-4224-9e71-409b818efce9
உலகக் கிண்ண 32 அணிகள் சுற்றில் மோதிய பிரேசில் - ஜப்பான் அணிகள் மீண்டும் சிங்கப்பூர் தேசிய விளையாட்டரங்களில் பலப்பரிட்சை நடத்தவுள்ளன. - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகள் ஜூலை மாதத்துடன் முடிவடைந்த போதிலும், இங்குள்ள காற்பந்து ரசிகர்கள் மீண்டும் ஓர் உலகத் தரத்திலான விளையாட்டு விருந்தைக் கண்டுகளிக்கும் வாய்ப்பைப் பெறவுள்ளனர்.

வரும் நவம்பர் மாதம் காலாங்கில் உள்ள தேசிய விளையாட்டரங்கில் சிங்கப்பூர், பிரேசில், ஜப்பான், பராகுவே ஆகிய அணிகள் நட்புமுறை ஆட்டங்களில் பொருதவுள்ளன.

‘மிஸுஹோ நீலச் சவால் - தி காலாங் காற்பந்துத் தொடர் சிங்கப்பூர்’ என்ற பெயரில் நவம்பர் 13 முதல் 17 வரை நான்கு ஆட்டங்கள் நடைபெறும்.

தி காலாங் குழுமமும் டென்சு ஸ்போர்ட்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்து அந்த ஆட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளன.

நவம்பர் 13ஆம் தேதி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சிங்கப்பூர் - பராகுவே அணிகள் மோதும். அதற்கு மறுநாள், உலகக் கிண்ண 32 அணிகள் சுற்றில் மோதிய பிரேசில் - ஜப்பான் அணிகள் மீண்டும் இங்குப் பொருதுகின்றன.

நவம்பர் 17ஆம் தேதி நடைபெறும் ஆட்டத்தில், ஐந்து முறை உலகக் கிண்ணத்தை வென்ற பிரேசில் அணியை சிங்கப்பூர் எதிர்கொள்கிறது. அன்று நடைபெறும் இன்னோர் ஆட்டத்தில் ஜப்பானும் பராகுவேயும் களத்தில் சந்திக்கவுள்ளன.

சிங்கப்பூர் - பராகுவே ஆட்டத்திற்கான நுழைவுச்சீட்டுக் கட்டணம் $28 முதல் தொடங்குகிறது. பிரேசில் - ஜப்பான் மோதும் ஆட்டத்திற்கான குறைந்தபட்ச நுழைவுச்சீட்டுக் கட்டணம் $98.

நவம்பர் 17ஆம் தேதி நடக்கும் இரு ஆட்டங்களையும் ஒரே நுழைவுச்சீட்டில் காணும் வாய்ப்பும் $98 கட்டணத்தில் வழங்கப்படுகிறது.

செப்டம்பர் 4ஆம் தேதி நண்பகல் 12 மணியிலிருந்து தி காலாங் இணையத்தளம் வழியாக நுழைவுச்சீட்டுகளை வாங்கலாம்.

அடுத்த ஜனவரி 7 முதல் பிப்ரவரி 5 வரை ஆசியக் கிண்ணப் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், இந்த ஆட்டங்கள் சிங்கப்பூர், ஜப்பான் அணிகளுக்கு நல்ல ஆயத்தக் களமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
காற்பந்துதேசிய விளையாட்டரங்கம்பிரேசில்சிங்கப்பூர்ஜப்பான்பராகுவே