‘ஃபார்முலா ஒன்’ (F1) கார்ப் பந்தயத் தொடரில் விறுவிறுப்பானதாக விளங்குகிறது சிங்கப்பூர் இரவு நேரக் கார்ப் பந்தயம்.
இப்பருவத்திற்கான சிங்கப்பூர் கார்ப் பந்தயம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 3) தொடங்கியது.
வெள்ளிக்கிழமை நடந்த பயிற்சி ஓட்டத்தில் 10 அணிகளும் தங்களது கார்களைச் சிங்கப்பூர் பந்தயச் சாலையில் ஓட்டிப்பார்த்தன.
சனிக்கிழமை (அக்டோபர் 4) நடக்கும் தகுதிச் சுற்றும் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 5) நடக்கும் பந்தயமும் சவாலாக இருக்கும் என்பதால் பயிற்சி ஓட்டத்தில் ஓட்டுநர்கள் கவனமாகச் செயல்பட்டனர்.
பந்தயத்தின்போது வெப்பம் அதிகமாக இருக்கும் என்பதால் ஓட்டுநர்கள் குளிர்ந்த ஆடையை அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மெக்லேரன் ஆதிக்கம்
இந்தப் பருவத்தில் மெக்லேரன் அணியின் ஓட்டுநர்கள் இருவரும் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர்.
ஆஸ்கர் பியாஸ்ட்ரி (Oscar Piastri) 324 புள்ளிகளுடன் ஓட்டுநர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்; லேண்டோ நாரிஸ் (Lando Norris) 299 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
சிங்கப்பூரில் மெக்லேரன் அணி 13 புள்ளிகள் குவித்துவிட்டால், அது அணிகளுக்கான வெற்றியாளர் கிண்ணத்தை இந்த ஆண்டும் வெல்லும்.
தொடர்புடைய செய்திகள்
கடந்த ஆண்டு நடந்த சிங்கப்பூர் கார்ப் பந்தயத்தில் லேண்டோ நாரிஸ் வென்றார். அதனால் அவர் இவ்வாண்டும் வாகைசூட முயற்சி செய்யலாம்.
சிங்கப்பூர் கார்ப் பந்தயத்தில் நான்கு முறை வெற்றிபெற்ற லூயிஸ் ஹேமில்டன் தனது அனுபவத்தைப் பயன்படுத்தி சக வீரர்களுக்கு நெருக்கடி கொடுக்க முயலலாம்.
ஹேமில்டன் முதல்முறையாக ஃபெராரி காரில் சிங்கப்பூரில் களமிறங்குகிறார்.
தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக உலக வெற்றியாளர் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளபோதும், மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் சிங்கப்பூரில் வெற்றிபெற்றதில்லை. அதனால், இம்முறை அவர் தமது முழுத்திறமையையும் காட்டக்கூடும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சனிக்கிழமை நடக்கும் தகுதிச்சுற்று இரவு 9 மணிக்கும் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் பந்தயம் இரவு 8 மணிக்கும் தொடங்கும்.