இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் முதல் அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனம் (ஃபிஃபா) ஆசியான் கிண்ணப் போட்டியில் சிங்கப்பூர் அணி பங்கேற்கும் என்பதை சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம் வியாழக்கிழமை (ஜூலை 30) உறுதிப்படுத்தியது.
‘ஏ’ பிரிவில் இந்தோனீசியா, இந்தியா, மலேசியா ஆகிய அணிகளைச் சிங்கப்பூர் எதிர்கொள்ளும். இப்பிரிவின் ஆட்டங்கள் இந்தோனீசியாவில் நடைபெறும்.
இந்தப் போட்டித்தொடர் செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 3ஆம் தேதி வரை, ஃபிஃபாவின் அதிகாரபூர்வ அனைத்துலகப் போட்டிக் காலத்தின்போது நடைபெற உள்ளது.
இவ்வட்டாரம் முழுவதும் காற்பந்தாட்டத்தின் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில், ஃபிஃபாவிற்கும் தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பிற்கும் (ஆசியான்) இடையேயான ஓர் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்தப் போட்டித்தொடர் தொடங்கப்படும் என்று 2025 அக்டோபரில் அறிவிக்கப்பட்டிருந்தது.
கோலாலம்பூரில் நடைபெற்ற 47வது ஆசியான் உச்சநிலை மாநாட்டின்போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அங்கு, ஃபிஃபா தலைவர் ஜியானி இன்ஃபன்டினோ, ஆசியான் தலைமைச் செயலாளர் காவ் கிம் ஹோர்ன் ஆகியோர் புதுப்பிக்கப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
போட்டி விவரங்கள்
இந்தப் போட்டித் தொடரில் 14 அணிகள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படும். ஒன்று, பிரிமியர் பிரிவு (பிரிவு 1). மற்றொன்று, சவால் பிரிவு (பிரிவு 2).
பிரிமியர் பிரிவில் தலா நான்கு அணிகள் கொண்ட இரண்டு பிரிவுகள் இருக்கும். ‘பி’ பிரிவில் வியட்னாம், தாய்லாந்து, பிலிப்பீன்ஸ், பாகிஸ்தான் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
சவால் பிரிவில் தலா மூன்று அணிகள் கொண்ட இரண்டு பிரிவுகள் இருக்கும். ‘ஏ’ பிரிவில் ஹாங்காங், மியன்மார், புருணை ஆகிய அணிகளும் ‘பி’ பிரிவில் கம்போடியா, லாவோஸ், திமோர்-லெஸ்டே ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. இந்தப் போட்டிகள் ஹாங்காங்கில் நடைபெறும்.
‘ரவுண்ட்-ராபின்’ சுற்றுக்குப் பிறகு, ஒவ்வொரு பிரிவிலும் முதல் நிலை பெறும் அணிகள் பிரிவுகளின் இறுதிப் போட்டியில் பங்கேற்கும்.
புதிய போட்டித் தொடரானது, “தங்களை தாங்களே சோதித்துக்கொள்ளவும் ஓரணியாக தாங்கள் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை அறிந்துகொள்ளவும் சிங்கப்பூர் அணிக்கு மற்றொரு வாய்ப்பை வழங்கும்,” என்று சிங்கப்பூர் தேசியக் காற்பந்து அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் கேவின் லீ கூறினார்.

