ஹனோய்: மிட்சுபிஷி இலெக்ட்ரிக் ஆசியான் வெற்றியாளர் காற்பந்துப் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் சிங்கப்பூரும் வியட்னாமும் மோத இருக்கின்றன.
அரையிறுதியின் முதல் ஆட்டம் சிங்கப்பூரின் ஜாலான் புசார் விளையாட்டரங்கில் டிசம்பர் 26ஆம் தேதியன்று நடைபெறுகிறது.
இரண்டாவது ஆட்டம் மூன்று நாள்கள் கழித்து வியட்னாமில் நடைபெறும்.
‘பி’ பிரிவில் வியட்னாம் முதலிடம் பிடித்தது.
‘ஏ’ பிரிவில் இரண்டாவது இடத்தைப் பிடித்த சிங்கப்பூருடன் அது மோத இருக்கிறது.
மற்றோர் அரையிறுதி ஆட்டத்தில் தாய்லாந்தும் பிலிப்பீன்சும் மோதுகின்றன.
டிசம்பர் 21ஆம் தேதி நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் மியன்மாரை 5-0 எனும் கோல் கணக்கில் வியட்னாம் தோற்கடித்தது.
சொந்த மண்ணில் வியட்னாம் கோல் மழை பொழிந்தது.
தொடர்புடைய செய்திகள்
வியட்னாமின் நட்சத்திர ஆட்டக்காரரான 27 பிரேசிலியர் ரெஃபெல்சன் இரண்டு கோல்களைப் போட்டார்.
வியட்னாமியக் குடியுரிமை பெற்ற இவர் நுயேன் சுவான் சோன் என்று அழைக்கப்படுகிறார்.
இவருடன் சேர்த்து கோல் போடும் ஆற்றல் கொண்ட பல ஆட்டக்காரர்களை வியட்னாம் கொண்டுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.
எனவே, வியட்னாமுக்கு எதிரான ஆட்டம் சிங்கப்பூர் குழுவுக்குச் சவால்மிக்கதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

