வாள்வீச்சில் சிங்கப்பூர் அணிகள் அசத்தல்

2 mins read
51afa264-a823-4613-a435-eb300dea1eb9
பெண்களுக்கான ‘ஃபாயில்’ குழு வாள்வீச்சுப் போட்டியில் சிங்கப்பூர் 45-32 என்ற புள்ளிக் கணக்கில் பிலிப்பீன்சை வீழ்த்தியது.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பேங்காக்: இவ்வாண்டின் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூரின் வாள்வீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர். இம்முறை எட்டுத் தங்கப் பதக்கங்களை வென்று சாதித்துள்ளனர்.

இதற்கு முன்னர் 2023ஆம் ஆண்டு கம்போடியாவில் நடந்த தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூரின் வாள்வீச்சாளர்கள் ஏழு தங்கப் பதக்கங்களை வென்றிருந்தனர்.

வெள்ளிக்கிழமை (டிசம்பர் 19) பிற்பகல் ‘பே‌ஷன் ஐலந்து’ கடைத்தொகுதியில் ஆண்களுக்கான ‘ஏப்பி’ குழு வாள்வீச்சுப் போட்டியில் சிங்கப்பூர் 44-34 என்ற புள்ளிக் கணக்கில் நடப்பு வெற்றியாளரான வியட்னாமை வீழ்த்தியது.

சிங்கப்பூர் அணியில் சி தோ ஜியான் தோங், அஸ்பர் லுக்மன் ஓங், சைமன் லீ, பிரான் சியும் இருந்தனர்.

அதன் பின்னர் நடந்த பெண்களுக்கான ‘ஃபாயில்’ குழு வாள்வீச்சுப் போட்டியில் சிங்கப்பூர் 45-32 என்ற புள்ளிக் கணக்கில் பிலிப்பீன்சை வீழ்த்தியது.

சிங்கப்பூர் அணியில் அமிதா பெர்தியர், மேக்சின் வோங், கெமி சியூங், ஸ்டெபனி லீ ஆகியோர் இருந்தனர்.

2023ஆம் ஆண்டு பெண்களுக்கான ‘ஃபாயில்’ குழு போட்டியிலும் சிங்கப்பூர் தங்கப் பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

வெள்ளிக்கிழமை இரவு நிலவரப்படி சிங்கப்பூர் 52 தங்கம், 60 வெள்ளி, 86 வெண்கலம் என 198 பதக்கங்களை வென்றுள்ளது. புள்ளிப் பட்டியலில் சிங்கப்பூர் ஐந்தாம் நிலையில் உள்ளது.

தாய்லாந்து 232 தங்கப் பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. இந்தோனீசியா (91) இரண்டாவது இடத்திலும் வியட்னாம் (86) மூன்றாவது இடத்திலும் மலேசியா (56) நான்காவது இடத்திலும் உள்ளது.

தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை (டிசம்பர் 20) நிறைவடைகின்றன.

குறிப்புச் சொற்கள்