அனைத்துலக பெண்கள் வலைப்பந்து போட்டியான சிங்லைப் நேஷன்ஸ் கிண்ணம் 2025 ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 2) தொடங்கி நவம்பர் 8ஆம் தேதி நிறைவடையும். இப்போட்டியில் சிங்கப்பூர் அணி வாகை சூடக் காத்திருக்கிறது.
அனைத்து ஆட்டங்களும் ஓசிபிசி அரங்கில் நடக்கின்றன.
இம்முறை நேஷன்ஸ் கிண்ணத்தில் சிங்கப்பூருடன் கென்யா, மலேசியா, ஐல் ஆஃப் மேன், பாப்புவா நியூ கினி ஆகியவற்றின் அணிகளும் கலந்துகொள்கின்றன.
தற்போது வலைப்பந்து தரவரிசையில் 22ஆம் இடத்தில் உள்ள சிங்கப்பூர் அணிக்குக் கென்யா கடுமையான சவால் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2024ஆம் ஆண்டு நேஷன்ஸ் கிண்ணத்தை வென்ற கென்ய அணி, கடந்த ஜூன் மாதம் ஐக்கிய அரபு சிற்றரசுகளில் நடைபெற்ற போட்டியில் சிங்கப்பூரிடம் தோல்வியடைந்தது. அதனால் இம்முறை கென்யா வெற்றிபெறப் போராடலாம்.
சிங்கப்பூர் கென்யாவுடன் நவம்பர் 4ஆம் தேதி இரவு 7 மணிக்கு மோதுகிறது. அதேபோல் சிங்கப்பூர் நவம்பர் 7ஆம் தேதி இரவு 7 மணிக்கு மலேசியாவுடன் பொருதும்.
தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் அடுத்த மாதம் தாய்லாந்தில் நடக்கவுள்ளது. தற்போது மலேசியாவுக்கு எதிராக விளையாடுவது சிங்கப்பூருக்கு நல்ல பயிற்சியாக அமையும் என்று கருதப்படுகிறது.
“கடுமையாகப் பயிற்சி செய்துள்ளேன். சிங்கப்பூருக்குக் கிண்ணத்தை வென்று தருவது மட்டுமே இலக்கு,” என்று ரீனா திவ்யா, 27, தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
கோல் காவலராகவும் தற்காப்புத் திடல் ஆட்டக்காரராகவும் ரீனா செயல்படுகிறார். அதேபோல் ரீனாவுக்கு துணையாகத் தற்காப்புத் திடலில் 23 வயது மிஷாலினியும் உள்ளார்.
15ஆண்டுகளாக வலைப்பந்து விளையாடும் மிஷாலினி சிங்கப்பூரை அனைத்துலக அளவில் பிரதிநிதித்து விளையாடுவது பெருமையளிப்பதாகக் கூறினார்.
கோல் அடிப்பதிலும் எதிரணியின் தற்காப்பை உடைப்பதிலும் கவனம் செலுத்தும் அமன்தீப் சஹால், 25, நேஷன்ஸ் கிண்ணத்தில் களமிறங்க ஆவலுடன் இருப்பதாகத் தெரிவித்தார்.
மூன்று வீராங்கனைகளுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் துணையாக இருந்ததையும் விளையாட்டிற்குத் தேவையான அனைத்தையும் பெற்றோர் செய்து கொடுத்ததையும் அவர்கள் நினைவுகூர்ந்தனர்.
செய்தி: சக்தி சிங்காரவேலு

