நகோயா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான கலப்பு தற்காப்புக் கலையில் சிங்கப்பூரின் டிஃபனி டியோ தங்கப் பதக்கம் வென்றார்.
இந்த வெற்றியின் மூலம் சிங்கப்பூருக்கு இந்த ஆசிய விளையாட்டில் முதல் தங்கம் கிடைத்துள்ளது.
ஜப்பானின் நகோயா நகர விளையாட்டு அரங்கில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 22) நடந்த 60 கிலோ கிராம் எடைப் பிரிவில் டியோ, உஸ்பெகிஸ்தானின் கிலோலா சாபிரோவாவை எதிர்த்துப் போட்டியிட்டார்.
சிறப்பாக விளையாடிய 36 வயது டியோ, கிலோலாவுக்குத் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து இறுதிச்சுற்றில் வெற்றிபெற்றார்.
வெற்றிபெற்ற உற்சாகத்தில் டியோ அரங்கில் இருந்த தனது கணவர் மற்றும் பயிற்றுவிப்பாளரான சிம் காய் சியோங்கை ஆறத் தழுவி ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.
2016ஆம் ஆண்டு முதல் கலப்பு தற்காப்புக் கலையில் போட்டியிடும் டியோ, பல்வேறு சவால்களுக்கு இடையிலும் தொடர்ந்து பயிற்சி செய்து தற்போது வாகை சூடியுள்ளார்.
