தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டிகளில் உருட்டுப்பந்து விளையாட்டு

சிங்கப்பூரின் ஜெரலின் டானுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வெள்ளிப் பதக்கம்

1 mins read
b4fd9173-e23f-4d10-a61a-b215cf962e89
போட்டிப் பங்காளியும் பயிற்றுவிப்பாளருமான யுனித்தா ஒமாருடன் ஜெரலின் டான் (வலது). - படம்: எங் சின் ஆன்/ஸ்போர்ட் சிங்கப்பூர்

பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்றுவரும் உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூர் வீராங்கனை ஜெரலின் டான், ‘போச்சா’ எனப்படும் ஒருவகை உருட்டுப்பந்து விளையாட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

உலகத் தரவரிசையில் இரண்டாம் நிலையில் உள்ள அவர், மகளிருக்கான ‘பிசி1’ இறுதிப் போட்டியில் பிரெஞ்சு வீராங்கனை ஒரேலி ஓபெர்ட்டிடம் 4-5 எனும் புள்ளிக் கணக்கில் தோல்வியுற்றார்.

என்றாலும், உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்றுள்ள சிங்கப்பூரின் நான்காவது வீராங்கனையாக டான், 35, விளங்குகிறார்.

இதற்கு முன்னதாக நடைபெற்ற தகுதிச்சுற்றில் ஓபெர்ட்டை 6-1 எனும் புள்ளிக் கணக்கில் டான் தோற்கடித்திருந்தார். எனினும், உலகத் தரவரிசையில் 16வது நிலையில் உள்ள ஓபெர்ட், இறுதிச் சுற்றில் நிலைமையைத் தலைகீழாக மாற்றி, வெற்றியை தன்வசமாக்கினார்.

இத்தாலிய மொழியில் ‘போச்சா’வுக்கு பந்தை உருட்டுவது என்று அர்த்தம். சக்கரநாற்காலிகளில் உள்ள வீரர்கள், இலக்கை குறிவைத்து விளையாடும் போட்டி அது.

குறிப்புச் சொற்கள்