பேங்காக்: தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகள் 2025ல் கலப்பு இரட்டையருக்கான 500 மீட்டர் படகோட்டத்தில் சிங்கப்பூரின் ஸ்டெஃபனி சென், லூக்கஸ் டியோ இணை தங்கம் வென்றுள்ளது.
ராயோங் நகரில் உள்ள அரசுத் தாய்லாந்துக் கடற்படைப் படகுப் பயிற்சி நிலையத்தில் புதன்கிழமை (டிசம்பர் 10) போட்டி நடைபெற்றது. அதில் 33 வயது சென்னும் 35 வயது டியோவும் மலேசியா, வியட்னாம், இந்தோனீசியா, தாய்லாந்து, மியன்மார் ஆகிய நாடுகளின் போட்டியாளர்களைப் பின்னுக்குத் தள்ளி முதல் நிலையில் வந்தனர்.
சிங்கப்பூர் இணை எடுத்துக்கொண்ட நேரம் 1 நிமிடம் 49.086 நொடிகள். இரண்டாவது இடத்தில் வியட்னாமும் (1:49.902) மூன்றாவது நிலையில் இந்தோனீசியாவும் (1:50.985) வந்தன. அவை முறையே வெள்ளி, வெண்கலப் பதக்கங்களைப் பெற்றன.
இவ்வாண்டு தென்கிழக்காசியப் போட்டிகளில் சிங்கப்பூருக்குக் கிடைத்திருக்கும் இரண்டாவது தங்கம் அது.
முன்னதாக, டேக்வாண்டோ போட்டியில் சிங்கப்பூருக்கு முதல் தங்கம் கிடைத்தது. அதனை டியானா அடிகா முகம்மது டியான் குதைரி, நிக்கலஸ் காவ் இணை பெற்றுத்தந்தது. கலப்பு இரட்டையர் போட்டி, பேங்காக்கின் ஃபேஷன் ஐலண்ட் கடைத்தொகுதியில் நடைபெற்றது.
இம்முறை 12,000க்கும் மேற்பட்ட விளையாட்டாளர்கள் 50க்கும் அதிகமான போட்டிகளில் பங்கெடுக்கின்றனர். அவற்றில் 574 தங்கங்களைப் பெற நாடுகள் போட்டியிடும்.
சிங்கப்பூர் இதுவரை இல்லாத அளவுக்கு 930 விளையாட்டாளர்களைக் களம் இறக்குகிறது. அவர்களில் 551 பேர் முதன்முறையாகத் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்கின்றனர். சிங்கப்பூர் வீரர்களும் வீராங்கனைகளும் 48 போட்டிகளில் திறன்களை வெளிப்படுத்துவர்.
சென்ற முறை கம்போடியாவில் நடைபெற்ற போட்டிகளில், சிங்கப்பூரின் 554 விளையாட்டாளர்கள் 30 போட்டிகளில் பங்கெடுத்தனர். அப்போது பதக்கப் பட்டியலில், சிங்கப்பூர் ஆறாம் நிலையைப் பிடித்தது. சிங்கப்பூருக்குக் கிடைத்த பதக்கங்கள்: 51 தங்கம், 43 வெள்ளி, 64 வெண்கலம்.


